தொழில் மலர் - 2019

கல்விச் செல்வம் தரும் சரசுவதி மகால் நூலகம்

DIN

தஞ்சாவூர் நூலகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாமன்னர் இரண்டாம் சரபோஜி உருவாக்கிய சரசுவதி மகால் நூலகமே. இரண்டாம் சரபோஜி மன்னர் கலை, பண்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்.
 இம்மன்னர் காலத்தில் பல கலைகள் வளர்ந்ததுபோல, மருத்துவக் கலையும் மிகவும் சிறப்புடன் வளர்ந்தது. சரசுவதி மகாலுடன் தன்வந்திரி மகால் என்ற மருத்துவ ஆய்வுக்கூடமும் இணைந்தே வளர்ந்தது.
 தவிர, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆரோக்கியச் சாலையும் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்ததை மோடி ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. ஆரோக்கிய சாலையில் கற்பித்தலும், நோயாளிகளைக் குணப்படுத்துதலும் மேலும் அவற்றுக்கான நூல்களை உருவாக்குதலுமாகிய மூன்று பணிகளும் ஒருங்கே நடைபெற்றன.
 மாமன்னர் இரண்டாம் சரபோஜி அரும்பாடுபட்டு வளப்படுத்திய சரசுவதி மகால் நூலகம் கல்விச் செல்வம் தரும் அரிய ஆலயம். உலகத்தில் வளர்ந்து வருகிற நாடுகளின் நிபுணர்கள், மாணவர்கள், பேராசிரியர்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது இந்நூலகம்.
 உலகப் புகழ்பெற்ற நூல்கள், பல்வேறு ஏட்டுச் சுவடிகள், கலைப்பொருள்கள் இங்கே உள்ளன. பழங்காலத்தில் கைத்தறி துணியால் செய்யப்பட்ட வண்ண அலங்காரங்கள், ஓவியங்கள், அரிய மருத்துவம், ஜோதிட சுவடிகள், அரிய மூலிகைளின் வண்ணப் படங்கள், 24 ஆயிரம் பாடல்கள் அடங்கிய வால்மீகி ராமாயண ஏட்டுச் சுவடி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
 மேலும், 1796- ஆம் ஆண்டில் டேனியல் சகோதரர்கள் வரைந்த இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளின் இயற்கைக் காட்சிகள், இமயமலைச் சாரலின் தோற்றம், விலங்கு, பறவை முகங்களுடன் மனித முக ஒப்புமை அமைப்புகள், மருத்துவக் குறிப்பேடுகள் ஆகியவையும் உள்ளன.
 நாட்டிய சாஸ்திர நூல்கள், சிற்ப நூல்கள், ஆகம நூல்கள், மந்திர யந்திர சாஸ்திரங்கள், ஜோதிட நூல்கள், சித்த மருத்துவம், கணிதம், இலக்கியம், நாடகம் போன்றவையும் உள்ளன. தற்காலத்தில் அறிவியல் திறம் கொண்டு இந்த நூலகத்தின் அருஞ்செல்வங்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
 இந்த நூலகத்துக்கு ஆய்வாளர்கள் வருவது போன்று சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வருகின்றனர். இந்நூலகத்தில் உள்ள பன்மொழிச் சுவடிகளினின்றும் இதுவரை இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஜோதிடம், கலை, சிற்பம் என பன்முகச் சிறப்புக் கொண்ட 594 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கருணை உள்ளங் கொண்ட நம் முன்னோர்கள் அரிய பெரிய இலக்கியங்களையும், பிறவற்றையும் பனை ஓலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை பல்வேறு இடங்களில் முடங்கி உள்ளன. சுவடிகள் பழுதடைவதற்கு முன்பு சரசுவதி மகாலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து உதவினால் அவை மக்களுக்குப் பயன்படும்.
 இந்நூலகத்துக்குக் கொடுப்பதன் மூலம் சுவடி தந்தவர்களும், சுவடி எழுதியோரும் அழியாப்புகழையும், பெருமையையும் சரசுவதி மகால் உள்ளளவும் பெறுவர். அவர் தம் பெயர் இடம்பெறுவதுடன், அப்பதிப்பில் ஐந்து பிரதிகளும் பெறுவர்.
 எனவே, நாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற எண்ணமுடைய நற்பண்பாளர்கள் தம்மிடம் உள்ள சுவடிகளைச் சரசுவதி மகாலுக்குத் தந்து உதவலாம்.
 சரசுவதி மகால் நூலகம் வெளியிடும் நூல்களுக்குச் சிறப்புச் சலுகையாக, செப். 24-ஆம் தேதி முதல் அக். 24-ஆம் தேதி வரை விடுமுறை நாள்கள் நீங்கலாக சரசுவதி மகால் நூலக வெளியீடுகளில் 31.3.2016-க்கு முன்பு வெளிவந்த நூல்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியும், அதற்கு பிறகு வெளி வந்துள்ள புதிய மற்றும் மறுபதிப்பு நூல்களுக்கு 10 சதவீதத் தள்ளுபடியும் அளித்து விற்பனை செய்யப்படவுள்ளது. தேவைப்படுவோர் நேரிலோ அல்லது இயக்குநர், நிர்வாக அலுவலர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் 613 009 என்ற முகவரிக்கு எழுதியோ புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 234107 என்ற எண்ணில் அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
 ஆ. அண்ணாதுரை
 மாவட்ட ஆட்சியர் மற்றும்
 நூலக இயக்குநர் (பொ).
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT