வணிகம்

பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்!

திருப்பூர், ஏப்.6: கடுமையான நூல் விலையேற்றம் மட்டுமின்றி ரூபாய்க்கு எதிரான டாலர் மற்றும் யூரோவின் மதிப்பு வீழ்ச்சி, மின்தட்டுப்பாடு, சாயக் கூலி உயர்வு என பன்முக பிரச்னைகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்று

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், ஏப்.6: கடுமையான நூல் விலையேற்றம் மட்டுமின்றி ரூபாய்க்கு எதிரான டாலர் மற்றும் யூரோவின் மதிப்பு வீழ்ச்சி, மின்தட்டுப்பாடு, சாயக் கூலி உயர்வு என பன்முக பிரச்னைகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர். வர்த்தக ஸ்திரமின்மையை கருத்தில் கொண்டு கூடுதல் நஷ்டங்களை தவிர்க்க வெளி நாடுகளிலிருந்து புதிய ஆர்டர்கள் பெறுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

போட்டி நாடுகளுக்கு வாய்ப்பாக அமையும் இச்சூழ்நிலைகளில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை அடுத்து ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர், யூரோவின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந் துள்ளது. கடந்த 2009 ஏப்.2ம் தேதி ஒரு டாலரின் மதிப்பு ரூ.50 என இருந்தது. அது ஜூன் 5ல் ரூ.47.08, அக்டோபர் 5ல் ரூ.47.53 என்றாகி 2010 ஏப்ரல் 6ம் தேதி ரூ.44.48ஆக சரிவடைந்தது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும். தவிர, கடந்த அக்டோபர் 5ல் ரூ.69.63 என்றிருந்த ரூபாய்க்கு எதிரான யூரோவின் மதிப்பும் திங்கள்கிழமை (ஏப்.5) ரூ.60.07ஆகவும், செவ்வாய்க்கிழமை ரூ.59.73ஆகவும் சரிந்தது. இவற்றின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்றும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பன்முக பிரச்னைகள்...: ஏற்கெனவே, திருப்பூரில் சாயக்கூலி 20 சதவீதம் உயர்வு, கடந்த 3 மாதங்களில் நூல் விலை 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பு, கடுமையான மின்பற்றாக்குறையை அடுத்து வாரியம் விதித்துள்ள 30 சதவீத மின்தடை, பெட்ரோல் டீசல் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சிக்கித்தவிக்கும் சூழலில் டாலர் மற்றும் யூரோ மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பன்முகப் பிரச்னைகளால் வெளிநாடுகளில் இருந்து புதிய ஆர்டர்களை பெறுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் ராஜா எம்.சண்முகம் கூறியது:

கடந்த காலங்களில் திருப்பூருக்கு அவ்வப்போது ஏதோ ஒரு பிரச்னை மட்டும் நிலவியதால் அவற்றை சமாளித்து வர்த்தக முன்னேற்றம் காண முடிந்தது. ஆனால், தற்போது ஒரே நேரத்தில் அதிகப்படியான பிரச்னைகள் ஏற்பட்டிருப்பது திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ரூபாய்க்கு எதிரான டாலர் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட போட்டி நாடுகளின் நாணயம் மதிப்பு அதிகரிக்கப்படவில்லை. இந்நிலையில், திருப்பூர் வர்த்தகர்கள் ஏற்க மறுக்கும் ஆர்டர்கள் போட்டி நாடுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆகவே, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலர் ஜி.கார்த்திகேயன் கூறுகையில், டாலர் மற்றும் யூரோ மதிப்பு, நூல் விலை உள்ளிட்டவற்றில் நிலவும் ஸ்திரமற்ற சூழலால் புதிய ஆர்டர்கள் பெருவதில் தயக்கம் காட்டப்படுவதுடன், ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்கள் நஷ்டத்தில்தான் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் புதிய ஆர்டர்கள் பெருவதில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அனைத்து பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கும் சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை...: நூல் விலையேற்றத்தைத் தடுக்கவும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரூபாய்க்கு எதிரான டாலர் விலையையும் ரூ.47.50க்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்புத் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருமான ஏ.சக்திவேல் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய மனுவில், இந்திய பங்குச் சந்தையில் டாலர் முதலீடு அதிகரித்து வருவது ஏற்றுமதி வர்த்தகத்துக்கு எதிர்விளைவை உண்டாக்கும். இதே போல், கடந்த 2007ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு உயர்த்த போது இந்திய பங்குச் சந்தையில் 4000 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அதனால், பெருமளவில் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது.

இது போன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் டாலர்களை சுமார் 2 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தம் செய்ய வேண்டும். மேலும், டாலர் விலை வீழ்ச்சியால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு போட்டித் திறன் குறைவதைத் தடுக்க ரூபாய்க்கு எதிரான டாலர் விலை ரூ.47.50 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT