வாகனக் காப்பீட்டில் மோசடி: விழி பிதுங்கும் வாகன உரிமையாளர்கள்
மத்திய அரசின் பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்யப்படும் வாகனக் காப்பீடுகளில், தற்போது பல விதங்களில் மோசடிகள் நடைபெற்றுவருவது வாகன உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்யப்படும் வாகனக் காப்பீடுகளில், தற்போது பல விதங்களில் மோசடிகள் நடைபெற்றுவருவது வாகன உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, ஓரியண்டல், நேஷனல் ஆகியனவும், 25-க்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், வாகனக் காப்பீடு, தீ காப்பீடு, மருத்துவக் காப்பீடு, திருட்டுப் பாதுகாப்பு காப்பீடு, தனிநபர் மற்றும் குழு விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பொதுக் காப்பீடுகளை வழங்கி வருகின்றன.
பொதுவாக முகவர்கள், புரோக்கர்கள் மூலமாகவும், அலுவலகத்தில் நேரிடையாகவும், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் பாலிசிக்கான பிரீமியம் செலுத்தப்பட்டு காப்பீடு செய்யப்படுகிறது.
வாகனக் காப்பீட்டில் பேக்கேஜ் பாலிசி (அனைத்து பயன்களும் அடங்கிய முழுக் காப்பீடு), லயபிலிட்டி பாலிசி (மூன்றாம் நபர் காப்பீடு) என இருவகை உண்டு. பேக்கேஜ் பாலிசிகளுக்கு கூடுதல் பிரீமியம் கட்ட வேண்டியது இருக்கும். இப்பாலிசி எடுப்பவர்களுக்கு வாகனத்துக்கும், வாகனத்தால் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும். மூன்றாம் நபர் காப்பீட்டுக்கு பிரீமியம் குறைவாக இருக்கும். ஆனால் வாகனத்துக்கு ஏற்படும் இழப்புக்கு இழப்பீடு கிடைக்காது. வாகனத்தால் மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.
வாகனக் காப்பீட்டில் ஒவ்வொரு வகையான வாகனத்துக்கும், அதன் சிசி திறன் (என்ஜின் பரிமாணத் திறன்), எச்.பி. திறன் (குதிரைத் திறன்) வாகன தயாரிப்பு நாள், எத்தகைய பயன்பாட்டுக்கான வாகனம் என்பன உள்பட ஆர்.சி. புக் (வாகனப் பதிவு புத்தகம்)-இல் உள்ள விவரங்களின் அடிப்படையில் பிரீமியம் வேறுபடும். குறிப்பாக, இலகுரக வாகனங்களுக்கு பிரீமியம் குறைவாகவும், கனரக வாகனங்களுக்கு பிரீமியம் அதிகமாகவும் இருக்கும்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காப்பீடு செய்ய வேண்டுமானால் அரசு பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையே வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.
பின்னர் வந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மட்டுமன்றி, இருசக்கர, நான்கு சக்கர வாகன டீலர்கள், தனியார் நிதி நிறுவனங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலக (ஆர்.டி.ஓ.) பணிகளில் ஈடுபடும் தரகர்கள், மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் வாகன பழுதுபார்க்கும் இடங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் கவர்நோட்டை (தாற்காலிக பாலிசிப் பத்திரம்) தாராளமாக கொடுத்து, இஷ்டத்துக்கு பாலிசி விற்பனையில் ஈடுபடத் தொடங்கின.
இங்குதான் காப்பீட்டுத் துறையில் மோசடிகள் ஆரம்பமாகத் தொடங்கின.
சில தனியார் காப்பீட்டு நிறுவனங்களில், வாடிக்கையாளரின் பழைய பாலிசி பிரதியை வைத்துக்கொண்டு அதில், பாலிசி காலம் குறிப்பிடும் இடத்தில் நிகழாண்டுக்குரிய தேதியை மாற்றி வழங்கும் முறைகேடு நடைபெறுகிறது.
புரபோசல் பாரத்தை (விண்ணப்ப பாரம்) தட்டச்சு அல்லது கணினி தட்டச்சு செய்து, நிரப்பி, அதை அச்சிட்டு, தாங்களே தயார் செய்த சீல் அடித்து, இதுதான் பாலிசி என ஏமாற்றுதல் (காரணம், அதில் பாலிசியில் வரும் முழு விவரங்களும் அடங்கியிருக்கும்).
மற்றொருவருடைய உண்மையான பாலிசியில், புதிதாக வரும் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, வாகன பதிவு எண் போன்றவற்றை மாற்றி போலியாக பாலிசி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் மோசடியாக பாலிசிகள் வழங்கப்படுகின்றன.
தாற்காலிகமாக கவர்நோட் வழங்குவதில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. அதே சமயத்தில் சில தனியார் நிறுவனங்களில் அதன் முறைகேடான பயன்பாடு காணப்படுகிறது.
தற்போது நிறுவனங்களில் நேரிடையாக வழங்கப்படும் பாலிசிகள் மற்றும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் பாலிசிகளில் திருத்தம் செய்து, போலியாக பாலிசி கொடுத்தல் அதிக அளவில் நடைபெறுகின்றன. இவ்வாறு மோசடியாக வழங்கப்படும் பாலிசிகளால் வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய பாலிசிகள் அனைத்தும் வாகனச் சோதனையின்போது காவல் துறையாலோ, வட்டாரப் போக்குவரத்து துறையாலோ கண்டுபிடிக்க முடியாது. அந்த வாகனத்துக்கு விபத்து ஏற்பட்டு இழப்பீடு கோரும்போது மட்டுமே பாலிசி போலியானது என்ற விவரம் தெரியவரும்.
வாகனங்களுக்கு விபத்து ஏற்படாத வரை போலியாக பாலிசி விற்பனை செய்தவர்களுக்கு பிரச்னை இல்லை. விபத்து ஏற்பட்டு, இழப்பீடு கோரிக்கை வந்துவிட்டால் வாகன உரிமையாளருக்குத் தலைவலிதான். அந்த வாகனத்தால் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் வாகன உரிமையாளர்களே முழு பொறுப்பாவர். எனவே பாலிசியின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்ட வேண்டும். எனவே காப்பீடு செய்வதிலும் புதுப்பிப்பதிலும் அவசரம் காட்டாமல், செயல்படுவது நல்லது.
தொழில்நுட்ப மோசடி
வாகனங்களில் 2 சக்கர, 3 சக்கர,4 சக்கர, கனரக வாகனங்கள் என ஒவ்வொரு வகைக்கும், என்ஜின் பரிமாண சிசி திறன், எச்பி-குதிரைத் திறன், வாகனத் தயாரிப்பு நாள், எத்தகைய பயன்பாட்டுக்கான வாகனம், உற்பத்தி ஆண்டு, பயணிகள் எண்ணிக்கை, தனிநபர் பயன்பாடா அல்லது பொதுப் பயன்பாடா, சரக்கு வாகனங்களில் வாகன எடை அளவு(GVW) என்பன உள்பட ஆர்சி புத்தகத்தில் (வாகனப் பதிவு புத்தகம்)-இல் உள்ள விவரங்களின் அடிப்படையில் பிரீமியம் தொகை கணக்கிட்டு பாலிசி வழங்கப்படும்.
இதில் சிசி குறைந்த வாகனங்கள், பயணிகள் எண்ணிக்கை அனுமதி குறைந்த வாகனங்கள், சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் போன்றவற்றுக்கு பிரீமியம் செலுத்துதல் மிகக் குறைவாக இருக்கும். சிசி அதிகமான, கூடுதல் பயணிகள் இருக்கைக்கு அனுமதி, பொதுப் பயன்பாட்டுக்கான வாகனம், கூடுதல் எடைகொண்ட கனரக வாகனங்கள் போன்றவற்றுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். பிரீமியம் கட்டுவதை குறைக்க வேண்டும் என்பதற்காக, சில வாகன உரிமையாளர்களின் ஒத்துழைப்போடு, காப்பீட்டு நிறுவன முகவர்கள், பொதுப் பயன்பாட்டு வாகனத்தை சொந்தப் பயன்பாட்டு வாகனமாக மாற்றிக் காண்பித்து காப்பீடு செய்தல்; சிசி திறனை குறைத்துக் காண்பித்து காப்பீடு செய்தல், பயணிகளின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பித்தல் உள்ளிட்ட மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய பாலிசிகள் உண்மையானதாக இருந்தாலும்கூட, இந்த வாகனங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்காது.
உண்மையான பாலிசிதானா என அறிவது எப்படி?
* ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தி, அதில் QR code (விரைவான பதில் குறியீடு-இரு பரிமாண பார்கோடு) செயலி மூலம், நாம் வைத்துள்ள வாகனத்துக்கான பாலிசியை ஸ்கேன் செய்து, பாலிசியின் நம்பகத் தன்மையை சரிபார்க்க முடியும்.
* பாலிசியின் உண்மைத் தன்மையை காப்பீட்டு நிறுவனத்தின் வலைதளம் அல்லது நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.
* அவசர காரணங்களுக்காக பாலிசியின் ஜெராக்ஸ் பிரதி, ஃபேக்ஸ் பிரதி, இமெயில் பிரதி வாங்கியிருந்தாலும், மறுநாளே முகவரை தொடர்பு கொண்டு ஒரிஜினல் பாலிசியை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
* பாலிசியில் என்னென்ன கவரேஜ் உள்ளது என்பது குறித்தும் முழுமையாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
* முகவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்றால் நிறுவனங்களுக்கு நேரிடையாகச் சென்று காப்பீடு செய்துகொள்வது சிறந்தது.