முகப்பு
வணிகம்

வருமான வரிக் கணக்கு தாக்கல் முக்கிய தகவல்கள்

நீங்கள் மாத வருவாய் ஈட்டுபவரா? அப்படியானால், கடந்த நிதி ஆண்டில் உங்களுடைய வருவாய், வருமான வரி குறித்த கணக்கை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது.

பகிர்:

நீங்கள் மாத வருவாய் ஈட்டுபவரா? அப்படியானால், கடந்த நிதி ஆண்டில் உங்களுடைய வருவாய், வருமான வரி குறித்த கணக்கை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது.

நாம் செலுத்தும் வருமான வரி குறித்த கணக்கை ஆண்டுதோறும் இந்திய வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31. இதனை நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் தாக்கல் செய்யலாம்.

மாதச் சம்பளம் பெறும் தனி நபர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது தொடர்பாக சில முக்கியத் தகவல்கள்:

நமது மாத வருவாயிலிருந்து வருமான வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது என்றால், அதனை வருமானத் துறையிடம் செலுத்திய விவரங்கள் அடங்கிய ஃபார்ம்-16 அல்லது ஃபார்ம் 16-ஏ படிவத்தை நாம் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதில் ஏப்ரல் முதல் மார்ச் வரை பெற்ற மொத்த வருவாய், வரிப் பிடித்தம் செய்திருந்தால் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கும். வரி செலுத்திய விவரங்களை, நமது வருவாய் பிரிவுக்கு ஏற்ப, வருமான வரித் துறையின் ஐ.டி.ஆர். படிவங்களில் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.

ஐ.டி.ஆர். படிவங்கள் ஐ.டி.ஆர்.-1, 2-ஏ,2,3,4-எஸ்,4,5,6,7 என்று ஒன்பது விதமாக உள்ளன. இதில் மாதச் சம்பளம் மட்டும் வாங்கும் நபர்கள், ஓய்வூதியம் பெறுவோர், "ஸஹஜ்' ஐ.டி.ஆர்.-1 படிவத்தைப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

வாடகை மூலம் பெறும் வருமானம், வட்டி மூலம் பெற்ற வருமான விவரங்கள் ஆகியவற்றையும் ஐ.டிஆர்.-1 "ஸஹஜ்' படிவம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.

பிற வகை வருமானம், தொழில் மூலமான வருமானம் உள்ளிட்டவற்றை ஈட்டும் நபர்கள் பிற வகை ஐ.டி.ஆர். படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். அதற்கான ஆலோசனையை முறையாகப் பெற்று வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

பல தனியார் நிறுவனங்களில் முறையான வருமான வரிப் பிடித்தம் செய்வதில்லை. ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட நபர்களிடம் ஊதியத்தில் 1 சதவீதம் வரிப் பிடித்தம் செய்யப்படும் வழக்கம் (டி.டி.எஸ்.) இருந்து வருகிறது. ஆனால் அந்த நபர்கள் வருமான வரி விலக்கு அளிக்கும் சேமிப்புகளை மேற்கொண்டாலும், பணியமர்த்தும் நிறுவனங்கள் அதனைக் கணக்கில் கொள்ளாமல் பிடித்தம் செய்து வருமான வரித் துறையிடம் செலுத்துகின்றன.

அது போன்ற சமயங்களில், முறையாக வருமான வரிக் கணக்கை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்து, பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையைத் திரும்பப் பெற்றுவிடலாம். அப்படிப் பெற வேண்டுமானால் முறையாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஐ.டி.ஆர். படிவத்தில் ஆண்டு வருமான விவரத்துடன், வரிச் சலுகை பெற்றுத் தரக் கடிய சேமிப்புத் தொகை, கல்விக் கட்டணம், கல்விக் கடனுக்கு வட்டி செலுத்திய விவரம் உள்ளிட்டவற்றைப் பூர்த்தி செய்து கொண்டு வந்தாலே, அதன் இறுதியில் திருப்பி அளிக்கப்பட வேண்டிய (ரீஃபண்ட்) தொகை என்கிற கட்டத்தில் அந்தத் தொகையைத் தெரிந்து கொள்ள முடியும்.

வருமான வரித் துறை உங்கள் ஐ.டி.ஆர். படிவத்தைப் பரிசீலித்து, அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் அந்த ரீஃபண்ட் தொகையைத் தானாக சேர்த்துவிடும். ஐ.டி.ஆர். படிவத்தைப் பூர்த்தி செய்வது மிக எளிது. சந்தேகம் எழுந்தால், பட்டயக் கணக்காளர் என்கிற சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் மூலம் படிவத்தைத் தாக்கல் செய்யலாம்.

முதலில், பணியாற்றும் நிறுவனத்திடமிருந்து, கடந்த ஆண்டு வருவாய் குறித்து ஃபார்ம்-16 அல்லது ஃபார்ம்-16ஏ அல்லது மாத வருமானச் சான்றிதழ் பெறுங்கள். அடுத்ததாக, வருமான வரித் துறையின் ஐ.டி.ஆர். படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து கணக்கைத் தாக்கல் செய்யுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.