புது தில்லி: மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் செயல்பாடுகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநராக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் நியமித்தது. அவரது மூன்று ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், பதவிநீட்டிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்ரமணியன் சுவாமி, ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு சுவாமி தற்போது எழுதியுள்ள கடிதம் விவரம்:
ரகுராம் ராஜனின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது, இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதைவிட, அதை சீர்குலைப்பவராகவே அவர் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு தேசியவாத சிந்தனை கொண்ட நிபுணர்கள் பலர் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இப்படியொரு சூழலில், காங்கிரஸ் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டு, இந்தியப் பொருளாதார நலன்களுக்கு எதிராகச் செயல்படும் ஒருவரை ஏன் அந்தப் பதவியில் நீடிக்கச் செய்ய வேண்டும்? என்று தோன்றுகிறது.
எனவே, தேச நலனைக் கருத்தில் கொண்டு ரகுராம் ராஜனை பிரதமர் மோடி உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும். நான் ஏன் இந்தப் பரிந்துரையை முன்வைக்கிறேன் என்றால், வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் ரகுராம் ராஜன் எடுத்துள்ள சில நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதாகக் கூறி வட்டி விகிதங்களை ரகுராம் ராஜன் உயர்த்தியது, இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாகத்தான் அமைந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க அரசால் வழங்கப்படும் கிரீன் (நிரந்தரக் குடியுரிமை) அட்டையை வைத்துக் கொண்டு அவர் இந்தியாவில் இருக்கிறார். அந்த அட்டையை செல்லத்தக்கதாக வைத்திருக்க வேண்டுமெனில், ஆண்டுக்கு ஒருமுறையாவது அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாய விதியை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்துகொண்டு அவர் கடைப்பிடிப்பது ஏன்?
ஆக, மன ரீதியாக ரகுராம் ராஜன் முழுமையான இந்தியர் அல்ல என்பது தெரியவருகிறது என்று அந்தக் கடிதத்தில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சகம் மற்றும் தொழில்துறையினரின் எதிர்ப்புகளையும் மீறி வட்டி விகிதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தவர் ரகுராம் ராஜன். எனினும், கடந்த ஜனவரி மாதம் முதல் அவர் தொடர்ச்சியாக வட்டி விகிதங்களைக் குறைத்ததன் விளைவாக, தற்போது அது 6.50 சதவீதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.