முகப்பு
வணிகம்

கோரா பட்டுச் சேலைகள் தயாரிப்பதில் நெருக்கடி

தீபாவளிப் பண்டிகைக்காக கோரா பட்டுச் சேலைகள் தயாரிப்பதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதால் கைத்தறி நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:29 AM
பகிர்:

தீபாவளிப் பண்டிகைக்காக கோரா பட்டுச் சேலைகள் தயாரிப்பதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதால் கைத்தறி நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
உடுமலை, பழனி வட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக கைத்தறி நெசவுத் தொழிலில் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது ரக டிசைன்களுடன் சந்தைக்கு வரும் சேலைகளுடன் போட்டி போட முடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் திருப்பூர், பல்லடம், சோமனூர் ஆகிய ஊர்களில் குடிபுகுந்தன.
இந்த நிலையில், மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் கோரா பட்டு என்ற புதிய ரக பட்டுச் சேலைகள் பொதுமக்களிடையே குறிப்பாக ஏழை, எளியவர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரபலமானது.
இந்த கோரா பட்டுச் சேலைகள் காஷ்மீர், ஒடிஸô, ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் குறிப்பாக உடுமலை, பழனி வட்டங்களில் தயாரிக்க இயற்கையான சூழ்நிலைகளும் உதவின. இதற்காக, சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு பட்டு நூல்கள் தருவிக்கப்பட்டன.
குறைந்தபட்சம் ரூ. 750 முதல் அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்துக்குள் தரமான, கண்கவர் பட்டுச் சேலைகளை உடுத்த முடியும் என்ற நிலை உருவானது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்த கோரா பட்டுச் சேலைகள் பெருமளவில் விற்பனையாகி வந்தன. இது, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தியது.
இந்த வகை சேலைகள் பெண்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதால், அகில இந்திய அளவில் பேசப்படும் நிலை உருவானது. இதைத் தொடர்ந்து, பிழைப்புக்காக வெளியூர் சென்ற கைத்தறி நெசவாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பம், குடும்பமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பினர்.
கோரா பட்டுச் சேலைகளுக்கான நூல்கள் சீனாவில் இருந்து இறக்குமதியாகி வந்த நிலையில், அந்த நாடு திடீரென வரியை கடுமையாக உயர்த்தியது. மேலும், இந்தியாவின் பஞ்சு ஏற்றுமதிக் கொள்கையால் நூல் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், கோரா பட்டுச் சேலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கோரா பட்டுச் சேலைகள் தயாரிப்பாளரான நரசிங்காபுரம் மணி கூறியதாவது:
கோரா பட்டுச் சேலைகளுக்கு மூலப் பொருள்கள் உள்நாட்டில் கிடைப்பதில்லை. பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களில் இதற்கான விலை கடுமையாக அதிகரித்துவிட்டது. உள்ளூரிலும் நூல் விலை அதிகரித்துவிட்டது.
இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், நாங்கள் தயாரிக்கும் கோரா பட்டுச் சேலைகளை சந்தையில் விற்கும்போது, பெரிய வியாபாரிகள் விலையை அதிகரித்துத் தர மறுத்து வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இதை வாங்கும்போது விலையை அதிகரித்து விற்க முடியாது. அப்படி விற்றால் காஞ்சிபுரம், பனாரஸ் போன்ற ரகங்களுக்கு பெண்கள் மாறிவிடுகிறார்கள்.
தயாரிப்பு விலை அதிகரித்துவிட்டது. இருப்பினும், எங்களுக்கு கிடைக்கும் லாபத்தைக் குறைத்து இந்தச் சேலைகளை விற்று வருகிறோம் என்றார் அவர்.
இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:
எங்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ. 400 கொடுக்கின்றனர். ஒரு சேலை நெய்து முடிக்க 2 முதல் 3 நாள்கள் வரை ஆகிறது. இதற்காக எங்களது குடும்பமே உழைக்க வேண்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் மீண்டும் நாங்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிடும்.
எனவே, எங்களது கூலியை உயர்த்தித் தரவும், தொழிலாளர் நல வாரியம் மூலம் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர் அவர்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →