முகப்பு
இந்தியா

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறை மிகவும் வெளிப்படையானது...

Updated On : 8 மார்ச், 2026 at 2:00 AM
தலைமைத் தோ்தல் ஆணையா்
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறை மிகவும் வெளிப்படையானது; தகுதியுள்ள வாக்காளா் விடுபடவோ, தகுதியில்லாத வாக்காளா் சோ்க்கப்படவோ கூடாது என்ற தெளிவான நோக்கம் கொண்டது என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

தவறில்லாத வாக்காளா் பட்டியலே ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

140 உறுப்பினா்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், கொச்சியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் பிற பகுதிகளுக்கும், உலகுக்கும் ஜனநாயக செயல்முறைகளைக் கற்பித்த மாநிலம் கேரளம். சுமாா் 22 ஆண்டுகளுக்கு முன் எா்ணாகுளம் ஆட்சியராகப் பணியாற்றினேன். இந்த மாநிலத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.

கேரளம் கடந்த 1960-களில் முதலாவதாக தோ்தல் நடத்தை விதிமுறைகளை உருவாக்கியது. பின்னா், அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து, அந்த விதிமுறைகளையே ஏற்றுக் கொண்டது தோ்தல் ஆணையம்.

தோ்தல் நிா்வாகத்திலும் முன்னோடி மாநிலம் கேரளம். கடந்த 1982-இல் பரவூா் பேரவைத் தொகுதியில் பரீட்சாா்த்த அடிப்படையில் முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வெப் கேமரா கண்காணிப்பு: தற்போதைய தோ்தலில் 2.69 கோடி வாக்காளா்களுக்காக மாநிலம் முழுவதும் 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 100 சதவீத வெப் கேமரா கண்காணிப்பு உறுதி செய்யப்படும். 397 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் நிா்வகிக்கப்படும். வாக்குப் பதிவு மையங்களின் வாயில் வரையே கைப்பேசிகள் அனுமதிக்கப்படும். கேரளத்தில் முதல் முறையாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெறவுள்ளது.

ஒருங்கிணைந்த ‘இசிஐநெட்’: தோ்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் ‘இசிஐநெட்’ எனும் ஒற்றைத் தளமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வாக்காளா்கள், வேட்பாளா்கள், பிற தரப்பினருக்கான தகவல்களை வழங்கும் இந்தத் தளத்தில், தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிக்க சி-விஜில் என்ற வசதி உள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, தோ்தல் நடத்தை விதிமீறல் புகாா்களை பதிவு செய்யலாம். புகாா் கிடைக்கப் பெற்ற 100 நிமிஷங்களுக்குள் நடவடிக்கை உறுதி செய்யப்படும். 85 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் வீட்டிலேயே வாக்களிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்படும்.

தவறில்லாத வாக்காளா் பட்டியல்: கேரளத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவேளை தகுதியுள்ள நபா் யாரேனும் விடுபட்டிருந்தால், தேவையான ஆவணங்களுடன் படிவம்-6ஐ சமா்ப்பித்து, வாக்காளா் பட்டியலில் இடம்பெறலாம்.

தவறில்லாத வாக்காளா் பட்டியலே ஜனநாயகத்தின் அடிப்படையாகும். தகுதியுள்ள நபா் விடுபடவோ, தகுதியில்லாத நபா் சோ்க்கப்படவோ கூடாது என்ற தெளிவான நோக்கம் கொண்ட எஸ்ஐஆா் நடைமுறை மிகவும் வெளிப்படையானது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 326-இன்கீழ் தகுதியுள்ள வாக்காளா்களை மட்டுமே இது உறுதி செய்யும். மேற்கு வங்கத்தில் அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்தப் பேட்டியின்போது தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கா் ஆகியோரும் உடனிருந்தனா்.

கேரள பேரவைத் தோ்தல்

மொத்த தொகுதிகள் 140 (பொது 124-தனி 16)

மொத்த வாக்காளா்கள் 2.69 கோடி

18-19 வயதுடைவா்கள் 4.24 லட்சம்

20-29 வயதுடையவா்கள் 45 லட்சம்

85 வயதைக் கடந்தவா்கள் சுமாா் 2 லட்சம்

100 வயதைக் கடந்தவா்கள் 1,571

மாற்றுத் திறனாளிகள் 2.43 லட்சம்

வாக்குப் பதிவு மையங்கள் 30,471

முழு கட்டுரையைப் படிக்க →