சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க எதிர்ப்பு
சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க அனுமதிக்க மாட்டோம். மாறாக, மேற்கு வங்க மாநிலம்...
சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க அனுமதிக்க மாட்டோம். மாறாக, மேற்கு வங்க மாநிலம், சிங்கூர் நில விவகாரத்தைப் போல, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிமையாளர்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும்' என்று சேலம் உருக்காலைக்கு நிலம் வழங்கி பாதிக்கப்பட்டோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலம் கஞ்சமலையில் கிடைக்கும் இரும்புத் தாதுவைக் கொண்டு இரும்பாலையை நிறுவ 1954-இல் மத்திய அரசு முடிவு செய்தது. 1970-71-ஆம் ஆண்டுகளில் பட்டா நிலங்கள் 3,500 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலங்கள் 500 ஏக்கரும் கையகப்படுத்தப்பட்டன.
அன்றைய காலகட்டத்தில், மேட்டு நிலம் ஏக்கருக்கு ரூ. 1,750, விவசாய நிலம் ரூ. 2,750 என்ற விலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இன்றைக்கு சேலம் உருக்காலையின் மொத்த மதிப்பு ரூ. 15,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சுமார் 4,000 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்துக் கொண்ட சேலம் இரும்பாலை நிர்வாகம், நிலங்களைக் கொடுத்த குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் 250 பேரை மட்டும் வேலைக்கு எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிறகு, நிலம் வழங்கியவர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புத் தரவில்லை. மாறாக, அகில இந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தி, ஆள்களைத் தேர்வு செய்து, நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை தராமல் புறக்கணிக்கின்றனர் எனக் கூறுகின்றனர் நிலம் வழங்கிய அந்தப் பகுதி மக்கள்.
இதுதொடர்பாக சேலம் உருக்காலைக்கு நிலம் வழங்கி பாதிக்கப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் சி. மாதேஷ் கூறியதாவது:
கஞ்சமலையில் கிடைக்கும் இரும்புத் தாதுவைக் கொண்டு இரும்பாலையை இயங்க வைக்கத் திட்டமிடப்பட்டு, அது முற்றிலும் நிறைவேறாத நிலையில், தற்போது சேலம் உருக்காலையாக மாற்றம் பெற்று எவர்சில்வர் ஸ்டீல் தகடுகளைத் தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனமாக உள்ளது. இந்தத் திட்டத்தை முழுமை பெறாத திட்டமாகக் கருதுகிறோம். அந்த வகையில், கடந்த 2006-இல் மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனம் நானோ கார் ஆலையை நிறுவ சிங்கூரில் 9,117 விவசாயிகளிடம் இருந்து 997.11 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி வழங்கியது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், நானோ கார் ஆலை அமைப்பதை டாடா நிறுவனம் குஜராத் மாநிலத்துக்கு மாற்றிக் கொண்டது.
இந்த வழக்கில், நிலங்களை வழங்கிய விவசாயிகளிடமே திரும்ப வழங்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31- ஆம் தேதி உத்தரவிட்டது. இதன்படி, மேற்கு வங்க மாநில அரசு விவசாயிகளுக்கே அந்த நிலங்களைத் திரும்ப வழங்கியது.
சேலம் உருக்காலைத் திட்டம் முழுமையாக நிறைவேறப்படாத நிலை உள்ளது. மேலும், நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாத நிலையில், சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு தனியாருக்கு விற்கும் அதேவேளையில், அரசுக்கு வழங்கிய நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். நிறுவனத்தை தனியாருக்கு வழங்கும்பட்சத்தில், நிலத்தை திரும்ப வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். எனவே, பயன்படுத்தப்படாமல் உள்ள 1,500 ஏக்கர் காலி நிலங்களை அவற்றை வழங்கியவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
4,000 ஏக்கர் நிலப்பரப்பில் உத்தேசமாக ரூ. 15,000 ஆயிரம் கோடி சொத்து மதிப்பை உடைய சேலம் உருக்காலையை சில ஆயிரம் கோடிகளில் கைப்பற்ற பெரு நிறுவனங்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன.
வட மாநிலங்களில் ஆண்டுக்கணக்கில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனத்தை விற்பது வஞ்சிக்கும் செயல் ஆகும். இதை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். நிலம் வழங்கிய விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
தனியார் மயமாக்க மீண்டும் முயற்சி
1970-71-ஆம் ஆண்டுகளில் சேலம் உருக்காலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1981 முதல் செயல்பட்டு வருகிறது. சுமார் 4,000 ஏக்கர் பரப்பில் 2,000 தொழிலாளர்களுடன் ஆலை இயங்கி வருகிறது.
சேலம் உருக்காலையைத் தனியாருக்கு தாரை வார்க்க வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 2000-ஆம் ஆண்டு முதல் சுமார் 2 ஆண்டுகளாக சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்திற்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு முதல் சேலம் உருக்காலை மீண்டும் புத்துயிர் பெற்று இயங்கத் தொடங்கியது.
சேலம் உருக்காலை 2003 முதல் 2010 வரை லாபத்தில் இயங்கி வந்தது. அதிகபட்சமாக ரூ. 123 கோடி வரை லாபம் ஈட்டியது அந்தக் காலக்கட்டத்தில்தான். 2010-இல் நாடு முழுவதும் உள்ள உருக்காலை விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் ரூ. 60 ஆயிரம் கோடியை முதலீடு செய்தது.
சேலம் உருக்காலையில் மட்டும் ரூ. 2,000 கோடி வரை முதலீடு செய்யப்பட்டது. எஃகு உருக்குக் கூடம் அமைக்க முதலீடு செய்யப்பட்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1,302 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தற்போது, மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement