வணிகம்

நாட்டின் ஜவுளி ஏற்றுமதி திடீர் உயர்வு வளர்ச்சி நீடிக்குமா?

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி உயர்ந்திருப்பதால் ஜவுளித் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

க. தங்கராஜா

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி உயர்ந்திருப்பதால் ஜவுளித் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது. மாதத்துக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதியாகி வரும் நிலையில், இதில் பெரும் பங்களிப்பை வழங்குவதாக திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளை உள்ளடக்கிய கோவை மண்டலம் உள்ளது.
தமிழகத்தில் சிறிய, பெரிய அளவிலான சுமார் 1,100 பஞ்சாலைகள் உள்ளன. இவர்கள் தயாரிக்கும் நூலைக் கொண்டு பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள், ஏற்றுமதிக்கான ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள், மருத்துவப் பயன்பாட்டுக்கான ஜவுளிகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
பஞ்சு விலை, நூல் விலை போன்றவற்றில் ஏற்படும் சீரற்ற மாற்றங்கள் இந்தத் தொழிலின் தொடக்கம் முதல் கடைநிலை வரையிலும் உள்ள தொழிலாளர்கள், உரிமையாளர்கள் அனைவரையும் பாதிக்கின்றன. அது ஜவுளி ஏற்றுமதியையும், அதைத் தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியையும் பாதிக்கும்.
கடந்த சில மாதங்களாகத் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தது. பஞ்சு விலை குறையாத நிலையில், அதிக அளவில் நூல் உற்பத்தி செய்யப்பட்டதால் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால், பெரும்பாலான பஞ்சாலைகள், உற்பத்தி செலவை விடக் குறைவான விலைக்கே நூலை விற்பனை செய்தன. மேலும், ஏராளமான பஞ்சாலைகள் சுமார் 35% வரையிலும் தங்களது உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
சரிந்தது ஜவுளி ஏற்றுமதி
கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் சீரான வரிவிதிப்பு இல்லாத நிலையால் ஏற்றுமதியாளர்களிடம் குழப்பமான நிலை நிலவியது. இவற்றுடன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு, டியூட்டி டிராபேக் பிரச்னை போன்றவையும் இந்தத் துறையின் சுணக்கத்துக்கு காரணமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இதனால், பலரும் எதிர்பார்த்ததைப் போலவே ஆண்டின் முதல் காலாண்டில் அதிகரித்திருந்த ஏற்றுமதி, 2-ஆவது காலாண்டில் குறையத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 4% சரிந்தது. நாட்டின் ஆடை ஏற்றுமதி சராசரியாக மாதத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது ரூ.8,556 கோடியாகக் குறைந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இது 3.91% குறைவாகும். 
மொத்த ஏற்றுமதி உயர்வு
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 25.67% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 21.3% அதிகம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.1,51,950 கோடியாக இருந்த ஏற்றுமதி, இந்த செப்டம்பரில் ரூ.1,84,387 கோடியாக உயர்ந்துள்ளது.
ரசாயனம், பெட்ரோலியம், என்ஜினீயரிங் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு இதற்குப் பெரிய காரணமாக இருந்தாலும் ஜவுளி ஏற்றுமதி அதிகரித்திருப்பதும் மற்றொரு முக்கிய காரணம் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜவுளித் துறையில் பருத்தி ஆடைகள், செயற்கை இழை ஆடைகள், ஆயத்த ஆடைகள் என அனைத்துப் பிரிவுகளிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி சுமார் 25% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பருத்தி ஆடைகளின் ஏற்றுமதி ரூ.5,315 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு இது 11.23% அளவுக்கு வளர்ச்சி அடைந்து ரூ. 5,911 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், செயற்கை இழை ஆடைகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் ரூ.2,487 கோடியாக இருந்தது. தற்போது 20.49% உயர்ந்து ரூ.2,996 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ. 8,570 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.10,707 கோடியாக உயர்ந்துள்ளது. இது 24.93% வளர்ச்சியாகும்.
கடந்த இரு மாதங்களாக ஏற்றுமதி சரிவடைந்து வந்த நிலையில் தற்போது திடீரென ஏற்றுமதி உயர்ந்திருப்பது ஜவுளித் துறையினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நிலையான வளர்ச்சியா?
இதுகுறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 26% அதிகரித்துள்ளது. அதேபோல் இறக்குமதியும் 18% உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் திடீரென வளர்ச்சி ஏற்பட்டிருப்பதைக் கண்டு பெரிய அளவில் மகிழ்ச்சிதான் என்றாலும், இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
பருத்தி ஆடைகள் துறையைப் பொருத்தமட்டில் இந்த வளர்ச்சி சீரானது என்பதால் அக்டோபர் மாதத்திலும் இது தொடரும் என்று நம்புகிறோம். அதேபோல செயற்கை இழை ஆடைகள் ஏற்றுமதி சுமார் ரூ. 3,000 கோடி என்ற அளவை எட்டியிருப்பதும் துறைக்கான நல்ல செய்தியாகவே பார்க்கிறோம். தொடர்ந்து 2 மாதங்கள் ஏமாற்றத்துக்குப் பிறகு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி உயர்ந்திருப்பதும், குறிப்பாக 25% வளர்ச்சி கண்டிருப்பதும் துறைக்கு நம்பிக்கையூட்டுவதாகவே உள்ளது. ஆனால், இந்த ஒரு மாத நிலையைக் கணக்கில் கொண்டு வளர்ச்சி என்று கருத்தில் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
காரணம் என்னவென்றால் ஏற்றுமதிக்கான வரிச் சலுகை (டியூட்டி டிராபேக்) செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடைவதால், கையிருப்பில் இருப்பதை விற்பனை செய்துவிட்டு சலுகையைப் பெற வேண்டும் என்பதில் உற்பத்தியாளர்கள் தீவிர கவனம் செலுத்தியதாலும் கூட இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.
அதேநேரம், ஏற்றுமதி ஆர்டர்களை அவ்வளவு எளிதில் பெற்று முடித்துக் கொடுத்திருக்க முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. இதனால் ஜவுளித் துறையின் இந்த திடீர் வளர்ச்சியானது நிபுணர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்று கூட சொல்லலாம்.
நம்பிக்கைதானே எல்லாம்!
தீபாவளி பண்டிகைக்கான உள்நாட்டு ஆடை விற்பனை அமோகமாக இருந்தது. ஆன்லைன் விற்பனையிலும், கடை விற்பனையிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. இதனால் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களிடம் இருந்த கையிருப்புகள் எல்லாம் தீர்ந்துவிட்டன.
அதேபோல், நூல், துணிகளின் கையிருப்பும் வெகுவாகக் குறைந்துவிட்டது. தீபாவளி விற்பனை அதிகமாக இருந்ததால், அடுத்த விற்பனைக்கான தேவைக்கு வாங்குபவர்களின் விசாரிப்பு தொடங்கியுள்ளது. இதனால், தீபாவளிக்குப் பிறகு நூற்பாலைகள் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கும்.
இந்த உத்வேகத்தால் ஏற்படும் நம்பிக்கை, அடுத்தடுத்த நிலையிலான ஜவுளித் தொழில் துறையினரையும் உற்சாகப்படுத்தும். இதுவரும் காலங்களில் உள்ளூர் ஆடை சந்தைக்கு மட்டுமின்றி ஏற்றுமதி வளர்ச்சிக்கும் உதவும் என நம்பலாம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT