பங்குச் சந்தையின் சீரிய வளர்ச்சியால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.20.70 லட்சம் கோடி அதிகரிப்பு
பங்குச் சந்தையின் சீரிய வளர்ச்சியால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 2017-18 நிதி ஆண்டில் ரூ.20.70 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையின் சீரிய வளர்ச்சியால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 2017-18 நிதி ஆண்டில் ரூ.20.70 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
சர்வதேச மற்றும் உள்ளூர் நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து 2017-18 நிதி ஆண்டில் சென்செக்ஸ் குறியீட்டெண் 3,348.18 புள்ளிகள் (11.30%) அதிகரித்து 32,968.68 புள்ளிகளை எட்டியது. அதிலும் குறிப்பாக, நடப்பு ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக பிஎஸ்இ குறியீட்டெண் 36,443 புள்ளிகளைத் தொட்டது. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் மொத்த சந்தை மதிப்பு 20,70,472 கோடி அதிகரித்து 1,42,24,997 கோடியானது.
2017-18 நிதி ஆண்டைப் பொருத்தவரை பங்குச் சந்தைகளுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. சென்செக்ஸ் ஏறக்குறைய 12 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இதற்கு, அன்னிய முதலீட்டு வரத்து வலுவான நிலையில் இருந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்களின் சிறப்பான பங்களிப்பு உள்ளிட்டவையே முக்கிய காரணங்களாக இருந்தது என கோட்டக் செக்யூரிட்டீஸ் துணைத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் டேட்டா பகுப்பாய்வு) சந்தீப் சோர்தியா தெரிவித்துள்ளார்.மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு முறையே வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கான கடைசி வர்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், சென்செக்ஸ் 205.71 புள்ளிகள் சரிவடைந்து 32,968.68 புள்ளிகளாக நிலைத்தது. நடப்பு நிதியாண்டின் இறுதி வர்த்தக தினத்தில் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.