ஈரான் மீதான பொருளாதாரத் தடை, சீன - அமெரிக்க வர்த்தகப் போர், துருக்கி, ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய நேரடி முதலீடு குறைவு, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக சரிவு தொடர்ந்தாலும், அதிகபட்சமாக ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூ. 71 என்ற அளவுக்கு சரிந்தது வர்த்தகத் துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவடைவது பொருளாதாரத்துக்கு உகந்தது இல்லை என்றபோதும், இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு கணிசமான பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
டாலர் மதிப்பில் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ரூபாய் மதிப்பு சரிவடையும்போது தொகையின் வித்தியாசத்துக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். இந்த லாபமானது உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு ஏற்ப மாறுபடும். ஏற்றுமதி ஆர்டர் கிடைத்த உடனே ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும், தற்போது ஆர்டரை உறுதி செய்து கொண்டு சில மாதங்களுக்குப் பிறகு பொருள்களை அனுப்புபவர்களுக்கும் லாப, நஷ்டங்கள் வித்தியாசப்படும்.
தற்போதைய நிலவரப்படி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உறுதியாக லாபம் கிடைக்கும் சூழல் இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை அனுபவிக்கவிடாமல் வெளிநாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் தடுத்துவிடுகின்றனர் என்கிறார் கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.
"டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 65-இல் இருந்து ரூ. 71-ஆக சரிவடைந்திருப்பதால் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு ஏற்றுமதியாளர்கள் சுமார் 10% வரை கூடுதல் லாபம் பெறும் நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் இந்தத் தொகை எல்லா ஏற்றுமதியாளர்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியப் பொருளாதார நிலையை வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மட்டுமின்றி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு போட்டியாக உள்ள வங்கதேசம், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதியாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால், இறக்குமதியாளர்கள் விழிப்புணர்வு பெற்று இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் தமக்கும் பங்கு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதனால் பொருள்களின் விலையை குறைத்துக் கேட்டும், ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யவும் நெருக்கடி கொடுக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத இறக்குமதியாளர்களையும் போட்டியாளர்கள் அறிவுறுத்திவிடுகின்றனர். இந்தப் பிரச்னைகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் எனில், இந்திய ஏற்றுமதியாளர்கள் வங்கிகளுடன் ஃபார்வர்டு எக்ஸ்சேஞ்ஜ் கான்ட்ராக்ட் செய்து கொள்வதே சிறந்த வழியாக இருக்கும். இந்த ஃபார்வர்டு கவர் செய்து கொள்வதற்கு கொஞ்சம் செலவாகும் என்றாலும் ஏற்றுமதியாளர்கள் அதை உடனடியாகச் செய்து கொள்வதே அவர்களின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்கும்' என்றார்.
ஃபார்வர்டு எக்ஸ்சேஞ்ஜ் கான்ட்ராக்ட் முறையை பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலமாக ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கத்தால் பாதிக்கப்படுவதில் இருந்து நிவாரணம் பெற முடியும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஜி.எஸ்.டி.க்கு பின்னர் ஆயத்த ஆடை ஏற்றுமதி கவலை அளிக்கும் விதமாக சுமார் 14% வரை குறைந்து கொண்டே வந்தது. ஆனால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் தற்போது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி 5.8% வரை உயர்ந்திருக்கிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இந்தியப் பொருளாதாரத்துக்கு அவ்வளவு உகந்ததாக இல்லை.
இருப்பினும் ரூபாய் மதிப்பு வீழ்ந்துள்ள நிலையில், வெளிநாட்டு ஆர்டர்கள் தற்போது திருப்பூரை நோக்கித் திரும்பியுள்ளன. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் கனவு இலக்கான ரூ. 1 லட்சம் கோடி ஏற்றுமதி என்பதை எட்ட முடியும் எனும் நம்பிக்கை மீண்டும் உருவாகியுள்ளது.
அதேநேரம், தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்து வரும் பலன் எந்த அளவுக்கு நிரந்தரமாக இருக்கிறது என்பதைப் பொருத்தே இந்த மகிழ்ச்சியின் கால அளவும் இருக்கும். தற்போதைய நிலையில் இருந்து ரூபாய் மதிப்பு திடீரென உயர்ந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஏற்றுமதியாளர்களுக்குப் பலன் கிடைக்கும்போது அதில் பங்கு கேட்டு வரும் இறக்குமதியாளர்கள், நஷ்டம் ஏற்படும்போது அதில் பங்கெடுக்க முன்வர மாட்டார்கள் என்பதால் ஏற்றுமதியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஃபார்வர்டு எக்ஸ்சேஞ்ஜ் கான்ட்ராக்ட் செய்து கொள்வதன் மூலமாக ஏற்றுமதியாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தற்போதைய நிலையில், ஏற்றுமதியாளர்கள் வங்கிகளுடன் அதிகபட்சம் 12 மாதங்களுக்கும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும். இந்த முறையின் மூலமாக நிறுவனத்தை நஷ்டம் இல்லாமல் எடுத்துச் செல்ல ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும். இதைப் பழக்கமாகவே மாற்றிக் கொண்டால் ரூபாயின் நிலையற்ற தன்மைகளால் பாதிக்கப்படாமல் இருக்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.