உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமேசான் டெலிவரி மையங்களை ஏற்படுத்த உள்ளது.
அமேசான் நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய டெலிவரி மையம் ஒன்றை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் டெலிவரி மையம் அமைவதன் மூலம் தமிழகம் முழுவதும் விரைவில் ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம், அதிகப்படியான ஆர்டர்களையும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற முடியும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களிலும் கிளை டெலிவரி மையங்களை அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
24,000 சதுர அடி பரப்பளவில் தமிழகத்தின் மிகப்பெரிய டெலிவரி ஸ்டோர் சென்னை விருகம்பாக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனத்தின் கிளை நிறுவனமான லாஸ்ட் மைல் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் இயக்குனர் பிரகாஷ் ரோச்லானி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலமாக, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் இது மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த டெலிவரி மையத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் சென்று மக்களுக்கு பொருட்களை நேரடி விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தை பலப்படுத்துவதோடு கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற முடியும்.
சமீபத்தில் அமேசான் நிறுவனம் ஹைதராபாத்தில் மிகப்பெரிய டெலிவரி மையத்தை திறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.