தண்ணீருக்காக ஏங்குவோரை, தவிப்பில் இருந்து மீட்டெடுக்கும் வகையில், ஆழ்துளைக் கிணறு அமைத்து, தண்ணீரை வெளிக்கொணரும் உன்னத தொழிலாகக் கருதப்படுவது ரிக் வாகனத் தொழில். கடந்த சில மாதங்களாக இத் தொழிலை நம்பியுள்ளோர் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனர். வாகனம் வைத்திருப்போரும், அதனுடன் பயணிப்போரும் வேலையின்றித் தவித்து வருகின்றனர். இதற்குக் காரணமாகக் கூறப்படுவது தற்போதைய பருவமழை மற்றும் மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி.
ரிக் வாகனத் தொழில் தொடக்கம்: கடந்த 1977-ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழில் தொடங்கியது. அதற்கு முன்பாக 50, 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எவ்வித இயந்திரமும் இல்லாமல் கடப்பாரை, மண்வெட்டி கொண்டு கைகளாலேயே பாரம்பரிய முறையில் கிணறு அமைத்து தண்ணீரை பெற்றுத் தந்தனர். ரிக் வாகனத்தின் இருப்பிடமாகக் கூறப்படுவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. தமிழகத்தில், வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் ரிக் வாகனங்கள் இங்கு அதிகப்படியாக உள்ளன.
தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும், திருச்செங்கோட்டில் இருந்தே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரிக் வாகனங்கள் செல்கின்றன. திருச்செங்கோடு, கோவை மாவட்டம், குன்னத்தூர், சேலம் மாவட்டம், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் சுமார் 17 ஆயிரம் ரிக் வாகனங்கள் உள்ளன. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ரிக் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. இங்குள்ள ஒரு ரிக் வாகனம் முலம் 10 முதல் 25 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மொத்தமாக 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பியுள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில், ஆழ்துளைக் கிணறு அமைக்க ரிக் வாகனங்கள் செல்கின்றன. வெளிநாடுகளிலும் சில நிறுவனங்கள் ரிக் பணி மேற்கொள்கின்றன. ரிக் தொழிலை நம்பி சத்தீஸ்கர், ஹரியாணா, பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தேடி வருகின்றனர்.
மழையால் தொழில் பாதிப்பு: ரிக் வாகனத் தொழிலைப் பொருத்தமட்டில், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் நீரை வெளிக் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்ளும். கடந்த 6 மாதங்களாக இத் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் மழை பெய்வதால், நிலம் ஈரத்தன்மையுடன் உள்ளது. இதனால் ஆழ்துளைக் கிணறு அமைப்பது குறைந்துள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் ஆள்துளைக் கிணறுப் பணிகளைத் தொடங்கிவிடும் நிலையில், மழை தொடருவதால் ஜனவரிக்கு பின்னர்தான் இத் தொழில் மேம்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஜி.எஸ்.டி. வரியால் நெருக்கடி: ரிக் தொழிலுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளது. அதாவது ரூ.1 லட்சம் வருவாய்க்கு ரூ.18 ஆயிரம் வரி செலுத்த வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் கேட்டுப் பெற வேண்டிய நெருக்கடியான சூழல் உள்ளது. விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்துக்குமான பணிகளை மேற்கொள்ளும் இத் தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் விலக்கு அளிக்கலாமே என்ற கோரிக்கையை ரிக் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
டீசலுக்கு ரூ.68 ஆயிரம் செலவு: சுமார் 500, 600 அடி ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது, ஒரு ரிக் வாகனத்துக்கு மட்டும் ரூ.68 ஆயிரம் வரையில் டீசல் நிரப்ப வேண்டிய நிலை உள்ளதாகவும், அதன்பின் கிடைக்கும் தொகையில் ஓட்டுநர் மற்றும் வேலையாள்களுக்கான கூலி, சுங்கச்சாவடிக் கட்டணம், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அனுமதிக்காகச் செலுத்த வேண்டிய கட்டணம் என சில ஆயிரம் மட்டுமே ரிக் வாகன உரிமையாளர்களுக்கு வருவாயாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தைவிட்டு பிற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டால் கிடைக்கும் வருவாய், வாகனப் பராமரிப்பு செலவுக்கே முழுவதுமாகச் சென்று விடுவதாக ரிக் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆழ்துளைக் கிணறு ஆபத்தானதல்ல: ஆழ்துளைக் கிணறு என்பது தற்போது உயிர்பலி வாங்கும் பகுதிபோல் மாறிவிட்டது. அண்மையில், மணப்பாறையில் நிகழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரிக் வாகனத் தொழில் பல நாள்களுக்கு பாதிப்படைந்தது. ஆழ்துளைக் கிணறு என்றால் ஆபத்தானது என பலரும் அச்சத்திற்குள்ளாகினர். ஆழ்துளைக் கிணற்றில் பதிக்கப்பட்டுள்ள சேசிங் குழாயை அகற்றாவிட்டால், எந்த குழந்தையும் பாதிக்கப்படாது.
ஆழ்துளையில் தண்ணீர் கிடைக்காத இடங்களில், சிலர் தண்ணீர் வரவில்லையே, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குழாய் வீணாகத்தானே போகும் என அதனை எடுத்து விற்பனை செய்வதால், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கின்றன. நில உரிமையாளர்களின் அலட்சியத்தால், ரிக் வாகனத் தொழிலை நம்பி இருப்போரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
அகில இந்திய ரிக் வாகன உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் என். குணசேகரன்: தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பருவக் காலங்களில் மழை பெய்தால் மட்டுமே நீர்மட்டமானது உயரும். இயற்கை வளத்தைப் பாதுகாப்பதில், ரிக் வாகனத் தொழில் முக்கியப் பங்காற்றுகிறது. விவசாய நிலங்கள் செழிப்புடன் வளர நாங்களும் ஒரு காரணம். இவ்வாறான நிலையில், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் ரிக் தொழில் முடங்கும் நிலை உள்ளது. டீசல் விலைக்கு ஏற்ப எங்களது கட்டணத்தை உயர்த்த முடியவில்லை.
அது மட்டுமின்றி, ஜி.எஸ்.டி.யால் தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளது. ரூ.ஒரு லட்சம் வருவாய் கிடைத்தால் 18 ஆயிரம் ஜி.எஸ்.டி.யாகச் செலுத்த வேண்டும் என்கின்றனர். அந்த தொகையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் கேட்டால் கிடைப்பதில்லை. இதனால் கிடைக்கும் வருவாயில் டீசல், ஜிஎஸ்டி என்று பாதியை இழக்கிறோம். ரிக் தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பலரைச் சந்தித்து முறையிட்டும், எவ்விதப் பயனும் இல்லை. இவ்வாறான நிலை தொடர்ந்தால், ரிக் தொழிலே முடங்கிப் போகும் என்றார்.
திருச்செங்கோடு ரிக் வாகன உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.கந்தசாமி: உலகத்திலேயே ரிக் வாகன உற்பத்தியும், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களும் உள்ள இடமாக திருச்செங்கோடு உள்ளது. ஐந்து, ஆறு மாதங்களாக வேலையின்றித் தவிக்கிறோம். ஒரு மாதத்துக்கு மட்டும், ஓட்டுநர், வேலையாள்கள், வங்கிக் கடன் உள்ளிட்டவற்றுக்கு ரூ.2 லட்சம் தேவைப்படும். ஒரு ரிக் வாகனம் ரூ.ஒன்றரை கோடி மதிப்புடையது. மாதம் ரூ.10 லட்சத்துக்கு ரிக் வாகனம் ஓடினால்தான் செலவுகள் போக ரூ.ஒரு லட்சமாவது வருவாயாகக் கிடைக்கும்.
ஒரு வாகனத்தை நம்பி சுமார் 25 தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால், தமிழகம் மட்டுமின்றி எந்த மாநிலத்திலும் ஆழ்துளைக் கிணறு பணி மேற்கொள்ள முடியவில்லை.
முக்கிய கோரிக்கையாக நாங்கள் தெரிவிப்பது, ஜி.எஸ்.டி.யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். எவ்வாறு மீன்பிடித் தொழிலுக்கு டீசல் மானியமாகவும், இலவசமாகவும் வழங்கப்படுகிறதோ, அதேபோல் ரிக் தொழிலுக்கும் வழங்க வேண்டும். மேலும், ஆழ்துளைக் கிணறு அமைக்கச் சென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.15ஆயிரம் அனுமதிக்காகச் செலுத்த வேண்டும் என்ற அரசாணை உள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர். 37 மாவட்டங்களிலும் சென்று அனுமதி பெறுவது சாத்தியமா? அதற்கு மாற்றாக, தமிழகம் முழுவதும் ஒரே அனுமதியை ரிக் வாகனத் தொழிலுக்கென வழங்க வேண்டும் என்றார்.
ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பழுதுநீக்குவோர் சங்க தலைவர் டி.டி.பரந்தாமன்: ரிக் வாகன உற்பத்தி என்பது திருச்செங்கோட்டையை முதன்மையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இங்கு 15 கூண்டு கட்டும் நிறுவனங்களும், 200-க்கும் மேற்பட்ட பழுது நீக்கும் மையங்களும் உள்ளன. ரிக் வாகனங்கள் வைத்திருப்போருக்கான பாதிப்பு தற்போது சற்று அதிகமாகவே உள்ளது. எங்கள் தொழிலைப் பொருத்தவரை, ஜிஎஸ்டிதான் பிரச்னையாக இருந்தது. 24 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வந்தோம். தற்போது 18 சதவீதமாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக தொழில் மந்தமாக இருந்தது. தற்போது உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. ரிக் வாகன உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைத்தால்தான் எங்களது தொழிலும் மேம்பாடு அடையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.