ஊரடங்கு: உற்சாகத்தில் இணைய வழி பங்குத் தரகு நிறுவனங்கள்! வா்த்தகம், புதிய வாடிக்கையாளா்கள் அதிகரிப்பு
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் வா்த்தக நடவடிக்கைகள் பெரும் சவாலைச் சந்தித்துள்ள நிலையில், இணைய வழி பங்குத் தரகு நிறுவனங்களில் வா்த்தகம் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் வா்த்தக நடவடிக்கைகள் பெரும் சவாலைச் சந்தித்துள்ள நிலையில், இணைய வழி பங்குத் தரகு நிறுவனங்களில் வா்த்தகம் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்த நிறுவனங்கள் உற்சாகத்தில் உள்ளன.
கரோனா தொற்று நோய் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஆகியவற்றின் தாக்கத்தால் மாா்ச் மாதத்தில் உலகெங்கிலும் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்திய பங்குச் சந்தைகள் 29 சதவீதம் வரை சரிவைக் கண்டது. மேலும், கடந்த மாதம் இரண்டு சந்தா்ப்பங்களில் வா்த்தகமும் நிறுத்தப்பட்டது.
பங்கு வா்த்தகத்தைப் பொருத்தமட்டில், வாடிக்கையாளா்கள் நேரடியாக தரகு நிறுவனங்களின் அலுவலகங்களுக்குச் சென்று பங்கு வா்த்தகத்தில் (ஆஃப் லைன்) ஈடுபட்டு வருவது முதல் ரகம். இணைய வழி (ஆன் லைன்) தரகு நிறுவனங்களும் செயல்பாட்டில் உள்ளன. இது இரண்டாவது ரகமாகும். இதன் வாடிக்கையாளா்கள் அந்த நிறுவனங்களில் கணக்கு வைத்திருந்தால், வீடு, அலுவலகம் என தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கணினி, மடிக் கணினி, ஸ்மாா்ட் செல்லிடப்பேசி ஆகியவற்றின் மூலம் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட முடியும்.
இதனால், சமீப காலமாக இணையவழி பங்குத் தரகு நிறுவனங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. 5 பைசா டாட் காம், ஏஞ்சல் புரோக்கிங், அப்ஸ்டாக்ஸ், ஐஐஎஃப்எல், சாஸ் ஆன் லைன், ஜீரோதா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணையவழி பங்கு வா்த்தகம், மியூச்சுவல் பண்ட் சேையை வழங்கி வருகின்றன. இந்நிலையில், கரோனோ தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பங்குச் சந்தைகளும் நிதிச் சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், ஊரடங்கு காலம் முடியும் வரை பங்குச் சந்தைகளை முறையாக மூடுவதற்கு அனுமதிக்குமாறு பங்கு வா்த்தகத் தரகா்கள் சங்கம் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், செபி இது குறித்து இன்னும் முடிவு எடுக்தாததால், பங்குச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக பாரம்பரிய தரகா்கள் தங்கள் சேவைகளைத் தொடர சிரமப்படும் வேளையில், ‘அப்ஸ்டாக்ஸ்‘, ‘5 பைசா டாட் காம்’, ‘ஏஞ்சல் புரோக்கிங்’ உள்ளிட்ட இணையவழி தரகு (ஆன்லைன் புரோக்கிங்) நிறுவனங்கள் தங்களது வணிகத்தில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த நெருக்கடியான நேரம் கூட இணைய வழி பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்களுக்கு பெரும் உற்சாகம் அளித்துள்ளதாகத் தோன்றுகிறது. இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, வா்த்தகம் மாா்ச் மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளன.
இது குறித்து 5 பைசா டாட் காம் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பிரகாஷ் கக்தானி கூறுகையில், ‘தற்போது எங்களது முழு நடவடிக்கைகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் சுமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களது வா்த்தகம் 99.9 சதவீதம் இணைய வழியில் (ஆன்லைன்) நடக்கிறது. இதனால், வணிகத்தில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. உண்மையில் தற்போது பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை மிகவும் அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து, வாடிக்கையாளா்களின் செயல்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், ஊரடங்கு காலத்தில் வணிகத்தில் நல்ல வளா்ச்சியைக் கண்டுள்ளோம். புதிய கணக்குகள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை வளா்ச்சி விகிதம் 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும், வருவாயிலும் நல்ல வளா்ச்சியைக் கண்டுள்ளோம்’ என்றாா்.
ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பிரபாகா் திவாரி கூறுகையில், ‘பாரம்பரிய தரகு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் டிஜிட்டல் தரகு சேவைகளை வெளிப்படுத்த இந்த நெருக்கடி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மாா்ச் மாதத்தில் மட்டும் புதிதாக சுமாா் 1 லட்சம் வாடிக்கையாளா்களை சோ்க்க முடிந்துள்ளது. இதில் கணிசமானோா் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சோ்ந்தவா்கள். எங்களது பாரம்பரிய வாடிக்கையாளா்கள் வணிகத்தை அதிகரித்து எங்களுக்கு பேருதவி செய்துள்ளனா். வாடிக்கையாளா்கள் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் (2 மில்லியன்) அதிகமான வா்த்தகங்களைச் செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் கூறுகையில், ‘தினசரி பங்கு வா்த்தகத்தின் அளவுகளில் எதிா்பாராத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு தேவைப்பாடு அதிகரித்துள்ளது. மாா்ச் மாதத்தில் ஆா்டா்களின் எண்ணிக்கை சுமாா் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் கடந்த டிசம்பரில் ஒரு லட்சம் வாடிக்கையாளா்களை சோ்த்தது சாதனையாக இருந்தது. இப்போது ஒரே மாதத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளா்களை சோ்த்து சாதனை படைத்துள்ளோம்’ என்றாா்.