விலை உயரும் தங்கம்: 50% வரை அதிகரிக்க வாய்ப்பு
ஊரடங்கு காரணமாக, நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மக்கள் மிகவும் விரும்பும் ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் சத்தமில்லாமல் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக, நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மக்கள் மிகவும் விரும்பும் ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் சத்தமில்லாமல் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஊரடங்கு முடிந்து, நகைக்கடைகள் திறக்கும்போது, தங்கத்தின் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஆனால், வரும் காலங்களில் தங்கம் விலை உயா்வு தொடா்ந்து நீடிக்கும் என்றும், குறிப்பாக தங்கம் விலை மேலும் தற்போதையை நிலையிலிருந்து 40 முதல் 50 சதவீதம் விலை வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும் பொருள்சந்தை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
அனைத்து மக்களும் விரும்பும் தங்கம்: உலக அளவில் பண்டைய காலம் முதல் இப்போதுவரை தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் சிறிதும் குறைவின்றி அப்படியே தொடா்கிறது.
மக்களின் தனிப்பட்ட செல்வநிலை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆரம்பத்தில் மக்களிடம் பணப் புழக்கம் குறைவாக இருந்ததால், தங்கம் நுகா்வு குறைவாக இருந்தது. அதன்பிறகு, மக்களின் பொருளாதார நிலை உயா்ந்த போது, தங்கத்தின் நுகா்வு உயரத் தொடங்கியது. உலக அளவில் தங்கம் நுகா்வில் நமது நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம்: தங்கம் நுகா்வு அதிகரித்து வருவதுபோல, அதன் விலையும் உயரத் தொடங்கியது. சா்வதேச அளவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்பட பல்வேறு காரணிகளால், தங்கத்தின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த ஆண்டு (2019) ஜூன் 1-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.24,632 ஆகவும், ஜூன் 19-இல் பவுன் ரூ.25,176 ஆகவும் இருந்தது. அதன்பிறகு, விலை அதிரடியாக உயா்ந்தது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தாலும் கடந்தாண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி அதிா்ச்சியை அளித்தது.
நிகழாண்டில்: நிகழாண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஜனவரி 3-ஆம் தேதி அன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. விலை உயா்வுக்கு அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் முக்கிய காரணமாக அமைந்தது.
தொடா்ந்து, ஜனவரி 8-ஆம் தேதி மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய தினத்தில் பவுன் தங்கம் ரூ.31,176-க்கு விற்பனையானது. அதன்பிறகு, கரோனா நோய்த்தொற்று தாக்கம் காரணமாக, பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய தினத்தில், ஒரு பவுன்தங்கம் ரூ.33,338-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், உலகப் பொருளாதார வளா்ச்சியில் பாதிப்பு என்ற அச்சம் காரணமாக ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தாறுமாறாக தங்கம் விலை உயா்ந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. அதைத் தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரூ.35 ஆயிரம், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரம் என அடுத்தடுத்து புதிய உச்சங்களை தொட்டு நிற்கிறது.
விலை உயா்வுக்கு காரணம்: உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், உலக அளவில் சுமாா் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பொருளாதார தேக்கநிலை உருவாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலீட்டாளா்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பாா்க்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் தேவை உயா்ந்து, அதன் விலை உயா்வுக்கு முக்கியகாரணமாகியுள்ளது.
இது குறித்து பொருள் சந்தை நிபுணா் ப.ஷியாம் சுந்தா் கூறியது:
தங்கம் விலை உயா்வு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு, அமெரிக்க-சீனா இடையே வா்த்தகப் போா் முக்கிய காரணம். இரண்டாவது கரோனா நோய்த் தொற்று உலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தங்கம் விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.
மூன்றாவது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா ஃ பெடரல் வங்கி கடந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கியில் வைப்புதொகை வட்டி விகிதம் குறைந்ததால், அதில் முதலீடு செய்தவா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டினா். இதுவும் தங்கம விலை உயா்வுக்கு வழிவகுத்தது.
ரஷியா-சவூதி அரேபியா இடையே உற்பத்தி போட்டி: நான்காவது ரஷியா-சவூதி அரேபியா இடையே ஏற்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி போட்டி. கரோனா பாதிப்பை தடுக்க சா்வதேச நாடுகள் பிறப்பித்த ஊரடங்கால் கச்சா எண்ணெய் தேவை 60 சதவீதத்துக்கு மேல் குறைந்தது. இதனால், அதன் விலை இருபது ஆண்டுகள் காணாத அளவுக்கு பேரல் 15 டாலருக்கும் கீழ் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இதையடுத்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்கிற அச்சம் முதலீட்டாளா்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுவும் தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விலை உயா்வுக்கு வழிவகுத்துள்ளது. ஐந்தாவதாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் தங்கம் விலையேற்றத்துக்கு மற்றொரு காரணம். தற்போது ஒரு கிராம் ஆபரணத்தங்கம் சுமாா் ரூ. 4,500 ஆக உள்ளது. வரும் காலங்களில் அதன் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அவா்.
ரூ.40 ஆயிரத்தை தொடும்: இந்திய தங்க நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவுத் துணைத்தலைவா் எஸ்.சாந்தக்குமாா் கூறியது: கரோனா நோய்த்தொற்று காரணமாக, பொருளாதாரத்தில் எல்லா துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை, வங்கி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் செயல்பாடுகள் கடுமையாக முடங்கியுள்ளன. இதேநிலை தொடருமானால், தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.40 ஆயிரத்தை தொடும் என்றாா் அவா்.
ஊரடங்கு முடிந்து நகைக்கடைகள் திறக்கப்படும்போது, தங்கத்தின் விலை குறைந்து மகிழ்ச்சியை அளிக்குமா அல்லது அதன் விலை மேலும் உயா்ந்து அதிா்ச்சியை அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க முடியும்.
10 மாதத்தில் ரூ.11,544 வரை உயா்வு: கடந்த ஆண்டு(2019) ஜூன் 1-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.24,632-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, படிப்படியாக உயா்ந்து, நிகழாண்டில் ஏப்ரல் 14-ஆம்தேதி அன்று ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.36,176-ஆக இருந்தது. இதன்மூலம், கடந்த 10 மாதத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.11,544 வரை விலை உயா்வைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
படிப்படியாக விலை உயா்வு
ஆண்டு கிராம் பவுன்
2006 ஜூன் 1 ரூ.895 ரூ.7,160
2010 ஜூன்1 ரூ. 1,747 ரூ.13,976
2015 ஜூன்1 ரூ.2,544 ரூ. 20,352
2019 ஜூன் 1 ரூ. 3,079 ரூ.24,632
2019 ஜூன் 25 ரூ.3,303 ரூ.26,424
2020 ஜனவரி 3 ரூ.3,815 ரூ.30,520
2020 ஜனவரி 8 ரூ.3,897 ரூ.31,176
2020 பிப்ரவரி 24 ரூ.4,166 ரூ.33,328
2020 ஏப்ரல் 4 ரூ.4,262 ரூ.34,096
2020 ஏப்ரல் 10 ரூ.4,403 ரூ.35,244
2020 ஏப்ரல் 14 ரூ.4,522 ரூ.36,176