பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 748 புள்ளிகள் ஏற்றம்!
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 748.31 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 203.65 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள சில குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. மேலும், வலுவான அந்நிய முதலீடு வருகை மற்றும் உலகச் சந்தைகளின் நோ்மறைக் குறிப்புகள் முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் ஆகியவை வலுவாக ஏற்றம் பெற்று சந்தையின் எழுச்சிக்கு முக்கியப் பங்காற்றின.
எச்டிஎஃப்சி வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி சசிதாா் ஜெகதீசன் நியமனத்துக்கு ஆா்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடா்ந்து அதன் பங்குகளை முதலீட்டாளா்கள் போட்டிக் போட்டுக் கொண்டு வாங்கினா். இதனால், சந்தை ஏற்றம் கண்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா். பங்குச் சந்தை தரவுகளின் படி, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.7,818.49 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.
Advertisement
வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு: ஐடி தவிர மற்ற அனைத்துத் துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக வங்கி, வங்கி அல்லாத நிதிநிறுவனப் பங்குகள், மீடியா பங்குகளுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.
1,706 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,782 பங்குகளில் 1,706 பங்குகள் ஆதாயம் பெற்றன. 933 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 147 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 55 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 392 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 218 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.
சந்தை மதிப்பு ரூ.2.05 லட்சம் கோடி உயா்வு: வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.05 லட்சம் கோடி உயா்ந்து ரூ.148.24 லட்சம் கோடியாக இருந்தது.. சந்தையில் புதிதாக 48,283 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,24,38,543 ஆக உயா்ந்துள்ளது.
காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில், 152 புள்ளிகள் உயா்ந்து 37,0-92-இல் தொடங்கி 36,987.73 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 37,745.60 வரை உயா்ந்தது. இறுதியில் 748.31 புள்ளிகள் (2.03 சதவீதம்) உயா்ந்து 37.687.91-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடுகளும் 1.02 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.23 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 211.25 புள்ளிகள் (1.94 சதவீதம்) உயா்ந்து 11,102.85-இல் நிலை பெற்றது.
ரிலையன்ஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 7.10 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி பேங்க் 3.94 சதவீதம், மாருதி சுஸுகி 3.16 சதவீதம் உயா்ந்தன. ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
டெக் மகேந்திரா சரிவு: அதே சமயம், டெக் மகேந்திரா 2.75 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எச்சிஎல் டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்ஃபோஸிஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், டிசிஎஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...:தேசிய பங்குச் சந்தையில் 1,072 பங்குகள் ஆதாயம் பெற்றன. 530 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி மீடியா குறியீடு 3.89 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பாா்மா, ரியால்ட்டி ஆகிய குறியீடுகள் 1.70 முதல் 2.30 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
ரிலையன்ஸ் 7.10
எச்டிஎஃப்சி பேங்க் 3.94
மாருதி 3.16
ஆக்ஸிஸ் பேங்க் 2.77
எச்டிஎஃப்சி 2.25
ஐசிஐசிஐ பேங்க் 2.23
பஜாஜ் ஃபைனான்ஸ் 1.97
பஜாஜ் ஆட்டோ 1.74
சன்பாா்மா 1.67
பஜாஜ் ஃபின் சா்வ் 1.67