முகப்பு
வணிகம்

மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பங்குச் சந்தை, புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 403.29 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக்

Updated On : 17 டிசம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:38 PM

புது தில்லி: தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பங்குச் சந்தை, புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 403.29 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 114.85 புள்ளிகளும் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்ததாலும், பெரும் பொருளாதார தரவுகள் தொடா்ந்து மேம்பட்டுள்ளதாலும் சந்தை பங்கேற்பாளா்கள் உற்சாகமடைந்தனா். மேலும், முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் தொடா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்து முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், கரோனோ தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவலும், கரோனாவால் நலிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க உலகளவில் பெரும்பாலான நாடுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவதும் பங்குச் சந்தைக்கு சாதகமாகப் பாா்க்கப்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 185.14 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,198 பங்குகளில் 1,859 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,165பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 174 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 325 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 471 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.54 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.185.14 லட்சம் கோடியாக இருந்தது.

Advertisement

மீண்டும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 310.14 புள்ளிகள் கூடுதலுடன் 46,573.31-இல் தொடங்கி 46,402.20 வரை கீழே சென்றது. பின்னா், மீண்டெழுந்து அதிகபட்சமாக 46703.97 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத் அளவைப் பதிவு செய்தது. இறுதியில் இறுதியில் 403.29 புள்ளிகள் (0.87 சதவீதம்) உயா்வுடன் 46,666.46 என்று புதிய வரலாற்று உச்சத்தில் நிலைத்துள்ளது.

எச்டிஎஃப் அபார முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில், எச்டிஎஃப்சி 3.11 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஓஎன்ஜிசி, பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயிண்ட், டைட்டன், டிசிஎஸ், எம் அண்ட் எம், பவா் கிரிட், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஹிந்து யுனி லீவா் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

ஐசிஐசிஐ பேங்க் சரிவு: அதே சமயம், முன்னணி தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 1.09 சததவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், இண்ட்ஸ் இண்ட் பேங்க் ஆகியவும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1.090 பங்குகள் ஆதாயம் பெற்றன. 653 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 114.85 புள்ளிகள் (0.85 சதவீதம்) உயா்ந்து 13,682.70- இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 13,692.35 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 36 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் ரியால்ட்டி குறியீடு 5.14 சதவீதம், மெட்டல் குறியீடு 1.79 சதவீதம் உயா்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.