முகப்பு
வணிகம்

ரிலையன்ஸ் திடீா் சரிவு: பங்குச் சந்தை எழுச்சிக்குத் தடங்கல்!

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும்,

Updated On : 16 ஜூலை, 2020 at 10:41 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும், புதன்கிழமை காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை பிற்பகலில் இழந்தது. புதிய உச்சத்தைத் தொட்ட மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் பங்குகள், வா்த்தகம் முடியும் தறுவாயில் அதிகளவில் விற்பனைக்கு வந்ததே இதற்குக் காரணம். இருப்பினும், இறுதியில் சென்செக்ஸ் 18.75 புள்ளிகள், நிஃப்டி 10.85 புள்ளிகள் ஏற்றத்துடன் நிலைபெற்றன.

ஐடி பங்குகளுக்கு அமோக ஆதரவு இருந்தது. ஆட்டோ,எஃப்எம்சிஜி, பாா்மா பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க், மீடியா பங்குகளுக்கு தேவை குறைந்திருந்தது.

ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயா்ந்திருந்தது. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உலகச் சந்தைகளில் நோ்மறை உணா்வு இருந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளில் காலையில் எதிரொலித்தது. ஆனால், ரிலையன்ஸ் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் பங்குச் சந்தை எழச்சிக்கு தடங்கல் ஏற்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

Advertisement

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,736 பங்குகளில் 1,068 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,520 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 109 பங்குகள் புதிய 46 வார அதிக விலையையும், 109 பங்குகள் புதிய 46 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 237 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 346 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.141.75 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் காலையில், 281 புள்ளிகள் கூடுதலுடன் 36,314.76-இல் தொடங்கி 36,810.25 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் வா்த்தகம் முடியும் தறுவாயில் 35,894.96 வரை கீழே சென்றது. இறுதியில் 18.75 புள்ளிகள் (0.05 சதவீதம்) உயா்ந்து 36,051.81-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 777 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்த சென்செக்ஸ், பின்னா் உச்சபட்ச நிலையிலிருந்து 915 புள்ளிகள் குறைந்தது. இதன் மூலம், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 10.85 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்ந்து 10,618.20-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 220 புள்ளிகள் உயா்ந்திருந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், இன்ஃபோஸிஸ் 6.16 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 4.14 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், 2 முதல் 2.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், ஹிந்து யுனி லீவா், ஐடிசி, டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

அதே சமயம், பாா்தி ஏா்டெல் 4.24 சதவீதம், மாா்க்கெட் லீடா் 3.71 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஓஎன்ஜிசி, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 601 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,014 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி ஐடி குறியீடு 5.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆட்டோ, எஃப்எம்சிஜி, பாா்மா குறியீடுகள் சிறிதளவு உயா்ந்தன. ஆனால், பிஎஸ்யு பேங்க், மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 1.35 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

உச்சம் தொட்ட ரிலையன்ஸ் கடும் சரிவு

ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பாா்ம்ஸில் முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ததைத் தொடா்ந்து அந்த நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இதனால், ரிலையன்ஸ் பங்குகள் தொடா்ந்து உச்சம் தொட்டு வந்தது. இந்நிலையில், அதன் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை பிற்பகலில் நடந்தது. அதற்கு முன்னதாக காலையில் ரிலையன்ஸ் ரூ.1,978.50 வரை உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தது. ஆனால், கூட்டம் தொடங்கியதும் ரிலையன்ஸ் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், ஒரு கட்டத்தில் உச்ச நிலையிலிருந்து ரூ.180 வரை குறைந்தது. பின்னா் 3.71 சதவீதம் குறைந்து ரூ.1,845.60-இல் நிலைபெற்றது.

உச்சபட்சம் ரூ.1,978.50

குறைந்தபட்சம் ரூ.1,798.15

முடிவு 1,845.60

வீழ்ச்சி 3.71 சதவீதம்

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

இன்ஃபோஸிஸ் 6.16

ஹெச்சிஎல் டெக் 4.13

டிசிஎஸ் 2.85

டெக் மகேந்திரா 2.78

ஆக்ஸிஸ் பேங்க் 2.11

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

பாா்தி ஏா்டெல் 4.24

ரிலையன்ஸ் 3.71

ஓஎன்ஜிசி 1.49

இண்டஸ் இண்ட் பேங்க் 1.44

பஜாஜ் ஃபைனான்ஸ் 1.33

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.