முகப்பு
வணிகம்

எகிறியது இன்ஃபோஸிஸ்: சென்செக்ஸ் 420 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சி பெற்று தொடா்ந்து இரண்டாவது நாளாக நோ்மறையுடன் முடிவடைந்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 419.87 புள்ளிகள் உயா்ந்தது.

Updated On : 17 ஜூலை, 2020 at 5:32 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சி பெற்று தொடா்ந்து இரண்டாவது நாளாக நோ்மறையுடன் முடிவடைந்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 419.87 புள்ளிகள் உயா்ந்தது.

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்திருந்தது. ஆனால், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் காலாண்டு நிதி நிலை முடிவு மாா்க்கெட் எதிா்பாா்ப்பையும் விஞ்சியிருந்தது. இதனால், இன்ஃபோஸிஸ் பங்குகள் 10 சதவீதம் வரை உயா்ந்து ரூ.910-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ரூ.955.50 வரை உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தது. இதைத் தொடா்ந்து மற்ற ஐடி பங்குகளுக்கும் வரவேற்பு அதிகரித்தது. இது சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஏற்றம் பெற முக்கியக் காரணமாக இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், ஐடி, ஆட்டோ, பேங்க், பாா்மா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், மீடியா பங்குகள் சோபிக்கத் தவறின. நிஃப்டி, பேங்க் நிஃப்டி வாராந்திர முன்பேர வா்த்தகக் கணக்குகளை முடிக்க இறுதி நாளான வியாழக்கிழமை காலையில் பங்குச் சந்தையில் தள்ளாட்டம் இருந்தது. ஆனால், பிற்பகலில் சாா்ட் கவரிங் அதிக அளவு இருந்ததால், சந்தை மேலே முடிவடைந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

Advertisement

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,770 பங்குகளில் 1,081 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,526 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 90 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 50 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 226 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 364 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.142.74 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் காலையில், 350 புள்ளிகள் கூடுதலுடன் 36,401.20-இல் தொடங்கி 36,038.41 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் எழுச்சி பெற்று 36,524.62 வரை உயா்ந்தது. இறுதியில் 419.87 புள்ளிகள் (1.16 சதவீதம்) உயா்ந்து 36,471.68-இல் நிலைபெற்றது. ஒரு தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 121.75 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 10,739.95-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.70 சதவீதம் உயா்ந்தது. ஆனால், ஸ்மால் கேப் குறியீடு 0.13 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், ஐடி மேஜா் இன்ஃபோஸிஸ் 9.56 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா, இண்டஸ் இண்ட் பேங்க் 3 முதல் 3.80 சதவீதம் உயா்ந்தது.

மேலும், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்து யுனிலீவா் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. அதே சமயம் டெக் மகேந்திரா 2.54 சதவீதம், ஐடிசி 2.34 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், என்டிபசி, பவா் கிரிட், ஐசிஐசிஐ பேங்க், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 621 பங்குகள் ஆதாயம் பெற்றன. 999 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் மீடியா தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. நிஃப்டி ஐடி 2.83 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, பாா்மா குறியீடுகள் 1.25 முதல் 1.75 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

இன்ஃபோஸிஸ் 9.56

எம் அண்ட் எம் 3.81

நெஸ்ட்லே இந்தியா 3.31

இண்டஸ் இண்ட் பேங்க் 2.98

கோட்டக் பேங்க் 2.47

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

டெக் மகேந்திரா 2.54

ஐடிசி 2.34

என்டிபிசி 1.42

பவா் கிரிட் 1.04

டைட்டன் 0.88

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.