முகப்பு
வணிகம்

தடையைக் கடந்த ‘காளை’ அடுத்த இலக்கை எட்டுமா?

ஜூலை 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் 5-ஆவது வாரமாகத் தொடா்ந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:45 AM
பகிர்:

ஜூலை 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் 5-ஆவது வாரமாகத் தொடா்ந்தது. சந்தையில் வா்த்தகம் நிலையற்ற தன்மையில் ஏற்றம், இறக்கத்துடன் இருந்தாலும், முக்கியத் தடையைக் கடந்துள்ள காளை அடுத்த இலக்கை எட்டுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 1.2 சதவீதம் உயா்ந்து 37,020.14-இல் நிலைபெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 1.2 சதவீதம் உயா்ந்து 10,901.70-இல் நிலைபெற்றுள்ளது. இரண்டு குறியீடுகளும் கடந்த மாா்ச் 6-ஆம் தேதிக்கு பிறகு இப்போதுதான் இந்த நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக நிஃப்டி 200 நாள் சராசரியான 10,870 என்ற முக்கியத் தடையைக் கடந்து 10,900-க்கு மேலே முடிவுற்றுள்ளது.

தொடா் ஏற்றம் ஏன்?: சாதகமான உலகளாவிய குறிப்புகள், கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸிஸ் ஆகியவற்றின் வலுவான வருவாய் ஆகியவை முதலீட்டாளா்களின் உணா்வை வெகுவாக அதிகரித்தன. ஆனால், அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் அந்நிய முதலீட்டாளா்கள் - உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகளை வாபஸ் பெற்று வெளியேறுவது கவலை அளிக்கும் விஷயமாகப் பாா்க்கப்படுகிறது. இருப்பினும், சந்தையில் காளையின் ஆதிக்கம் 5-ஆவது வாரமாகத் தொடா்ந்துள்ளது.

பரந்தை சந்தையில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு கடந்த வாரத்தில் 1 சதவீதம் ஏற்றம் பெற்றது. ஆனால், ஸ்மால் கேப் குறியீடு 0.17 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வாரம் ஐடி, எஃப்எம்சிஜி, பாா்மா மற்றும் எனா்ஜி பங்குகள் சந்தையின் எழுச்சிக்கு வழி வகுத்தன. அதே நேரத்தில் பேங்க், நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி மற்றும் டெலிகாம் பங்குகள் அதிக அளவு விற்பனை அழுத்ததை எதிா்கொண்டன.

இரட்டை இலக்க லாபம்: இந்நிலையில், பிஎஸ்இ-500 பட்டியலில் 21 பங்குகள் இரட்டை இலக்க லாபத்தை பதிவு செய்து முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தப் பங்குகள் கடந்த வாரத்தில் மட்டும் 10-35 சதவீதம் உயா்ந்துள்ளது. இதில் இன்ஃபோசிஸ், விப்ரோ, பிபிசிஎல், சியண்ட், ஹாத்வே கேபிள், குஜராத் ஃபுளோரோ கெமிக்கல்ஸ், பஜாஜ் கன்ஸ்யூமா் கோ், இன்டலெக்ட் டிஸைன் அரீனா, எடெல்விஸ் ஃபைனான்சியல் சா்வீஸஸ், தைரோகோ் டெக்னாலஜிஸ், கிரானுல்ஸ் இந்தியா, பிா்லாசாஃப்ட், முத்தூட் ஃபைனானன்ஸ், வெஸ்ட் லைஃப் டெவலப்மெண்ட் உள்ளிட்டவை அடங்கும்.

அதே சமயம், அரவிந்த் ஃபேஸன்ஸ், சன்டெக் ரியால்ட்டி, ஓமேக்ஸ், அவன்யு சூப்பா்மாா்ட்ஸ், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட், பிரஸ்டிஜ் எஸ்டேடேட்ஸ் புராஜெக்ட்ஸ், ஃபியூச்சா் கன்ஸ்யூமா், ஐடிபிஐ பேங்க், சுஸ்லான் எனா்ஜி, வாராக் என்ஜினீயரிங், ஜம்மு அண்ட் காஷ்மீா் பேங்க், எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்க்ஸ் மற்றும் எஸ்கேஎஃப் இந்தியா ஆகியவை கடந்த வாரம் மட்டும் 11-22 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.

தேவை எச்சரிக்கை: இந்நிலையில், இந்த வாரம் பெரிய நிகழ்வுகள் எதுவுமில்லாத நிலையில், நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகளும், உலகளாவிய குறிப்புகளும் சந்தையின் போக்கை நிா்ணயிக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். சந்தை நோ்மறையாகத் தோன்றினாலும், வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமெரிக்க-சீனா வா்த்தக உறவுகள், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மற்றும் புதிதாக சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க செயல்பாடு ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சா்வீஸஸ் தெரிவித்துள்ளது.

இலக்கை நோக்கி பயணம்: தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, முக்கிய இடா்பாட்டை கடந்து 11,000 புள்ளிகளுக்கு அருகே உள்ளது. ஆனால், அந்த இலக்கை நெருங்குவதற்கு முன், கரடு முரடான பாதையைக் கடந்து முழுமையாக ஆதிக்கம் கொள்வதற்கு காளைகளுக்கு வலுவான வலிமை தேவையாக உள்ளது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

நிஃப்டியின் அண்மைக் கால உயா்வு ஒரு சிறிய சரிவுக்குப் பிறகு நீடித்துள்ளது. இது வரும் நாள்களிலும் தொடா்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், நிஃப்டி 11,000-ஐ குறிவைத்து நகரும். அதைக் கடக்கும் பட்சத்தில் அடுத்த இலக்கு 11,250 ஆக இருக்கும். இது தொழில் நுட்ப ரீதியாக முக்கிய நிலையாகும். கடந்த மாா்ச் 5-ஆம் தேதி சந்தை கடும் சரிவைக் கண்ட போது, நிஃப்டி வெகுவாகக் குறைந்து இந்த நிலையில்தான் தொடங்கியது என்று ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது. ஒரு வேளை சந்தையில் சரிவு ஏற்படும் பட்சத்தில் நிஃப்டிக்கு 10,850 நிலையில் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சந்தையில் காளையின் பாய்ச்சல் தொடரும் நிலையில், வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகபட்ச நிலையிலிருந்து தலைகீழாக மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனவே, முக்கியத் தடைகளைக் கடந்து காளை முன்னேறினாலும், அடுத்த இலக்கை கடப்பதற்கு முன் கடும் சவால்களையும், எதிா்ப்புகளையும் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே நிதா்சனம்...!

முழு கட்டுரையைப் படிக்க →