6 மாதங்களில் 100 - 1,100 சதவீதம் லாபம்: புரியாத புதிராக "ஜொலிக்கும்' நட்சத்திரங்கள்!
கரோனாவைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் முதல் முறை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இதுபோன்ற பங்குகளில் அதிகம் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலானோர் நல்ல அடிப்படைகளைக் கொண்ட முதல் தரப் பங்குகளில் தான் முதலீடு செய்ய விரும்புவர். பென்னி ஸ்டாக்ஸ் என்று அழைக்கப்படும் குறைந்த விலையில் வர்த்தகமாகி வரும் பங்குகள் மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் மீது கவனம் செலுத்தமாட்டார்கள். சிலர் மட்டுமே இதுபோன்ற பங்குகளை குறிவைத்து வாங்குவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பலத்த அடி வாங்கி வந்த இந்தப் பங்குகள் சமீப காலமாக அதீதமாக ஏற்றம் பெற்று வருவது சந்தை வட்டாரத்தில் புரியாத புதிராக இருந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு மிகவும் குறைவாகும்.
சந்தையில் ஏற்றம் ஏன்?
சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பங்குச் சந்தை, 2018-ஆம் ஆண்டு முதல் கரடியின் பிடியில் இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் விலையில் ஏற்பட்ட கடும் சரிவுக்கு பிறகு, முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தப் பங்குகள் அதிகம் கவனம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் இருந்து வந்த இந்தப் பங்குகள், திடீரென ஏற்றம் பெறுவது சந்தை வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிப்பீட்டு அடிப்படையில் இந்தப் பங்குகள் கவரச்சிகரமாக இருந்ததும், புதிய முதலீட்டாளர்கள் வாங்குவதில் கவனம் செலுத்தியதும் இந்தப் பங்குகள் திடீரென ஏற்றம் பெறத் தொடங்கியதற்கு முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கரோனாவைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் முதல் முறை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இதுபோன்ற பங்குகளில் அதிகம் கவனம் செலுத்தத் தொடங்கினர். இதன் காரணமாக ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகள் கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு எழுச்சி பெற்றுள்ளன என்று பிரபல பங்கு வர்த்தகத் தரகு நிறுவனமான சாம் கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
இந்த வகையில், ரூ.1,000-ரூ5,000 கோடி சந்தை மூலதன மதிப்பைக் கொண்டிருந்த 8 நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் 100 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன என்று "ஏஸ் ஈக்விட்டி' தரவுகள் தெரிவிக்கின்றன.
இவற்றில், ஐஓஎல் கெமிக்கல்ஸ் (299%) , சுஸ்லான் எனர்ஜி (150%), ஆர்த்தி டிரக்ஸ் (134%), பெஸ்ட் அக்ரோலைஃப் (118%), அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ் (117%), மார்க்சன்ஸ் பார்மா (115%), அஸ்டெக் லைஃப் சயின்சஸ் (109%) , ஜிடிஎல் இன்ஃப்ரா (105%) ஆகியவை முதலீட்டாளர்களின் செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளன.
பென்னி ஸ்டாக்ஸ்-கவனம் தேவை
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பங்குச் சந்தையில் கடந்த ஆறு மாதங்களில் ஸ்மால் கேப் குறியீடு சுமார் 12 சதவீதம் மற்றும் மிட்கேப் குறியீடு 9 சதவீதம் உயர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதற்கிடையே, ரூ.1,000 கோடிக்கும் குறைவான சந்தை மூலதன மதிப்பைக் கொண்டுள்ள பல்வேறு நிறுவனப் பங்குகள் கடந்த ஆறு மாதங்களில் முதலீட்டாளர்களின் செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளன. இந்த வகையில் 78 பங்குகள் 100 முதல் 1,100 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இருப்பினும், சிறிய, நடுத்தர மற்றும் பென்னி ஸ்டாக்ஸ்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். பென்னி ஸ்டாக்ஸ் என்பவை 10 ரூபாய்க்கும் குறைவாகக் கூட வர்த்தகம் ஆகும். இந்த நிறுவனங்களில் புரமோட்டர்கள் வசம் 15 சதவீதத்துக்கும் குறைவான பங்குகள்தான் இருக்கும். மேலும், இவை சாத்தியமான வணிகத்தையும் கொண்டிருக்காது. அதே சமயம், சிறிய நிறுவனங்களில் புரமோட்டர்கள் வசம் பங்குகள் அதிக அளவில் இருக்கும். மேலும்,. வணிகத்தை விரிவுபடுத்துவதுடன், ஒட்டுமொத்த நிகர லாபமும் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கும். எனவேதான் பென்னி ஸ்டாக்ஸ்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்துகிறோம் என்கிறார் எஸ்.எஸ்.ஜே. பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டீஸின் ஆய்வாளர் அதிஷ் மத்லாவாலா.
பென்னி ஸ்டாக்ஸ் வழக்கமாக எந்தவொரு அடிப்படைகளையும் கொண்டிருக்காது. மேலும், இந்த நிறுவனங்களில் நல்ல நிர்வாகமும் இருக்காது. எனவே, இதுபோன்ற நிறுவனப் பங்குகளில் எந்தவொரு மதிப்பீட்டையும் கணிப்பது மிகவும் கடினமாகும். பென்னி ஸ்டாக்ஸின் விலை, செய்தி மற்றும் நம்பிக்கையால் இயக்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற பங்குகளின் விலைகளில் வியத்தகு உயர்வையும், வியத்தகு வீழ்ச்சியையும் பார்க்கலாம் என்றும் அதிஷ் மத்லாவாலா கூறுகிறார்.
நிபுணர்கள் எச்சரிக்கை
இதற்கிடையே, பங்குச் சந்தை பணம் சம்பாதிப்பதற்கான எளிதான இடம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்களில் பெரும்பாலானோர் கூறுகின்றனர். நாடு தழுவிய பொது முடக்கத்தால், மக்கள் வீட்டில் சிறப்பாகச் செய்ய எதுவும் இல்லை என்ற காரணத்தால், பலர் பங்குகளில் முதலீடு செய்ய / வர்த்தகம் செய்யத் தேர்ந்தெடுத்துள்ளனர். பலர் முதல் முறை முதலீட்டாளர்களாக சந்தையில் நுழைந்துள்ளனர். சந்தையில் ஒரு முறை அல்லது இரண்டு முறை அதிர்ஷ்டம் பெறலாம். ஆனால், எல்லா நேரத்திலும் அது சாத்தியமாகாது. இந்த முதலீட்டாளர்களில் பலர் நிறுவனங்களின் அடிப்படைகள் மற்றும் மதிப்பீடுகளைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ளாமல் விரட்டிச் சென்று பங்குகளை வாங்குகின்றனர். இது வேதனையில்தான் முடியும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
மொத்தத்தில் பார்த்தால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பலத்த அடி வாங்கி வந்த சிறிய, நடுத்தர, பென்னி ஸ்டாக்ஸ்கள் "ஜாக்பாட்' போல லாபத்தை அளித்து புரியாத புதிராக சந்தையில் "ஜொலித்து' வருகின்றன என்பதே உண்மை...!