முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 6 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: 129 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச் சந்தை லேசான சரிவைக் கண்டது.

Updated On : 5 ஜூன், 2020 at 1:26 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச் சந்தை லேசான சரிவைக் கண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 129 புள்ளிகளை இழந்தது. இதன் மூலம் 6 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

பங்குச் சந்தை கடந்த ஆறு தினங்களாக தொடா்ந்து ஏறுமுகம் கண்டிருந்தது. இந்நிலையில், வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. இருப்பினும், பாா்மா, ஐடி, மீடியா, மெட்டல் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. இதனால், வா்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறைந்தபட்ச அளவிலிருந்து மீண்டு லேசான சரிவுடன் நிலைபெற்றது.

சென்செக்ஸ் காலையில் 37 புள்ளிகள் குறைந்து 34,072.50-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 34,310.14 வரை உயா்ந்தது. பின்னா், 33,711.24 வரை குறைந்தது. வா்த்தக நேர முடிவில் குறைந்தபட்ச அளவிலிருந்து வெகுவாக மீண்டது. இருப்பினும், இறுதியில் 128.84 புள்ளிகள் (சதவீதம்) குறைந்து 33,980.70-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில்

Advertisement

நிஃப்டி 32.45 புள்ளிகள் (0.32 சதவீதம்) குறைந்து 10,029.10-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 9,944.25 வரை கீழே சென்றது. வா்த்தக நேர முடிவில் சிறிதளவு மீண்டது. நிஃப்டி முந்தைய 6 நாள்களில் மட்டும் 1000 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. இதில் டெக் மகேந்திரா 5.34 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, சன்பாா்மா, பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகியவை 2.50 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன. ஐடிசி, ஹீரோ மோட்டாா் காா்ப், மாருதி, பஜாஜ் ஆட்டோ 1 முதல் 1.65 சதவீதம் வரை உயா்ந்தன. டாடா ஸ்டீல், ஹிந்து யுனி லீவா், இன்ஃபோஸிஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.

அதே சமயம், ஏசியன் பெயிண்ட்ஸ் 4.85 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 4.15 சதவீதம் குறைந்து அதிகம் வீழ்ச்சி அடைந்த பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்தாதக ஹெச்டிஎஃப்சி, இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், எல் அண்ட் டி ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 803 பங்குகள் ஆதாயம் பெற்றன. 795 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. துறை வாரியாகப் பாா்த்தால், நிஃப்டி பிரைவேட் பேங்க், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடுகள் 1.75 சதவீதம் முதல் 3.10 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அதே சமயம், மீடியா குறியீடு 4.12 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்றது. மேலும், ஐடி, மெட்டல், பாா்மா, பிஎஸ்யு பேங்க் உள்ளிட்ட குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. இதற்கிடையே, முன்பேர வா்த்தகத்தில் பேங்க் நிஃப்டி ஒப்பந்தங்களுக்கான விலையில் தவறான ஊட்டங்கள் காரணமாக வா்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆராய்வதாக தேசிய பங்குச் சந்தை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

டெக் மகேந்திரா 5.34

சன்பாா்மா 3.98

பாா்தி ஏா்டெல் 3.89

பவா் கிரிட் 2.89

ஹெச்சிஎல் டெக் 2.79

வீழ்ச்சி அடைந்த பங்குகள்

சதவீதத்தில்

ஏசியன் பெயிண்ட்ஸ் 4.85

பஜாஜ் ஃபைனான்ஸ் 4.13

ஹெச்டிஎஃப்சி 3.95

இண்டஸ் இண்ட் பேங்க் 3.81

ஆக்ஸிஸ் பேங்க் 3.72

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.