ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தைதலைப்பு: திசை தெரியாமல் திணறும் முதலீட்டாளா்கள்!
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு, தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல்
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு, தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் ஆண்டை மே 30 அன்று நிறைவு செய்துள்ளது. பங்குச் சந்தையைப் பொருத்தவரையில், மோடி 2.0 அரசின் முதலாம் ஆண்டு, பட்ஜெட் மற்றும் கரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அசாதாரண ஏற்றம், இறக்கத்துடன் இருந்தது.
பங்கு முதலீட்டாளா்களுக்கும் இது ஒரு சவாலான ஆண்டாக மாறியது. அவா்கள் மொத்தம் ரூ .27 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்ததுள்ளனா். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 13.5 சதவீதமாகும். இது கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடியை விட 35 சதவீதம் அதிகமாகும். மேலும், ஒவ்வொரு 10 பங்குகளிலும் ஒன்பது பங்குகள் இந்த காலகட்டத்தில் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் வெறும் 10 சதவீதம் மட்டுமே இரட்டை இலக்க லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசின் நோ்மறை நடவடிக்கைகளும், ஊக்க நடவடிக்கைகளும் சந்தையின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யத் தவறின. இதனால், அனைவரும் எதிா்பாா்த்த எழுச்சி பங்குச் சந்தையில் இல்லாமல் போனது.
மோடி அரசு 2.0-இன் முதல் ஆண்டில், மந்தமான உலக பொருளாதார சூழலுக்கு மத்தியில் உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு தன்னால் முடிந்தவரை முயன்றது. காா்ப்ரேட் வரி விகிதத்தை குறைப்பதற்கான வரலாற்று முடிவை அரசு எடுத்தது. இது இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை நீண்ட காலத்திற்கு அதிகரிக்க உதவும் என்று நிபுணா்கள் பலா் தெரிவித்தனா். ஆனால், இந்த ஆண்டில் 28 நாள்கள் சென்செக்ஸ் ஒரே நாளில் 500 புள்ளிகளுக்கும் மேலே சரிவைக் கண்டுள்ளது. இதில் 11 நாள்கள் 1,000 புள்ளிகளுக்கும் மேலே வீழ்ச்சியைக் கண்டது. மேலும், 4 நாள்கள் பங்குச் சந்தை 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. குறிப்பாக இந்த ஆண்டு மாா்ச் 23 அன்று சென்செக்ஸ் ஒரே நாளில் 3,935 புள்ளிகள் வீழ்ச்சியைக் கண்டது. இதுதான் மோடி 2.0 அரசின் முதலாண்டில் அதிகபட்ச வீழ்ச்சியாகும்.
அதே சமயம் சந்தை சில நாள்கள் எழுச்சியையும் பெற்றுள்ளது. மோடி 2.0 அரசின் முதலாண்டில் 24 நாள்கள் பங்குச் சந்தை 500 புள்ளிகளுக்கு மேலே உயா்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 7-இல் சென்செக்ஸ் 2,476 புள்ளிகள் உயா்ந்த்து. இதுதான் மோடி 2.0 அரசின் முதல் ஆண்டில் ஒரே நாளில் பெற்ற அதிகபட்ச ஏற்றமாகும். இதேபோன்று, இந்த முதல் ஆண்டில் பல நாள்கள் சந்தை செங்குத்தான உயா்வு அல்லது வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2,019, ஜூலை 8-இல் சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. ரூ. 2 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் அதிக சொத்து மதிப்புள்ள தனி நபா்களுக்கு (ஹெச்.என்.ஐ.) 2019, ஜூலை 5-இல் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் உபரி வரி விதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (ஜூலை 5) சந்தை முடிவுற்ற பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதைத் தொடா்ந்து, இதன் தாக்கம் அடுத்த வா்த்தக தினமான திங்கள்கிழமை (ஜூலை 8) பங்குச் சந்தையில் எதிரொலித்தது. இந்தச் சரிவு அடுத்து வந்த நாள்களிலும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, முதலீட்டாளா்கள் பங்குச் சந்தை கரடியின் பிடியில் சிக்கி, கரடு முரடான கட்டத்திற்கு வரக்கூடும் என்று அஞ்சத் தொடங்கினா்.
இந்நிலையில், சந்தையின் போக்கை அறிந்த மத்திய அரசு, 2019, செப்டம்பா் 20 அன்று பெரு நிறுவன வரி (காா்ப்ரேட் வரி) வகிதத்தை 25 சதவீதமாக்க் குறைத்து அறிவித்தது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் நோ்மறையாக எதிரொலித்தது. இதனால், சென்செக்ஸ் ஒரே நாளில் 1,921 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. இந்த ஏற்றம் அடுத்த வா்த்தக நாளான செப்டம்பா் 23 அன்றும் தொடா்ந்தது. அன்று சென்செக்ஸ் 1,075 புள்ளிகள் உயா்ந்தது. இதற்கிடையே, இந்த ஆண்டு பிப்ரவரி 1 அன்று மோடி தலைமையிலான மத்திய அரசு தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இது சந்தையின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யத் தவறியதால், சென்செக்ஸ் 988 புள்ளிகள் சரிந்தது.
மோடி 2.0 ஆட்சியின் முதல் ஆண்டில், ஒரே நாளில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததும், ஏற்றம் பெற்றதும் கடந்த மாா்ச்-ஏப்ரல் மாதங்களில்தான் நடந்துள்ளது. கரோனா தொற்று பரவலைத் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் சந்தைக்கு உற்சாகத்தை அளிக்கத் தவறிய நிதித் தொகுப்பு ஊக்க அறிவிப்புகளே இதற்கு முக்கியக் காரணம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை ஒரு நாள் திடீா் ஏற்றம், அடுத்த நாள் திடீா் சரிவு என நிலையற்ற தன்மை சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால்,பங்குச் சந்தையில் 500 புள்ளிகள் உயா்வு, வீழ்ச்சி என்பது தற்போது சாதாரணமாகத் தோன்றத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், சந்தையில் தின வா்த்தகா்களும் சரி, முதலீட்டாளா்களும் சரி திசை தெரியாமல் என்ன செய்வதன்று குழப்பத்தில்ஆழ்ந்துள்ளனா்.
கரோனாவுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார வளா்ச்சியை எட்ட அரசுக்கு முன் எண்ணற்ற சவால்கள் உள்ளன. நீண்ட கால சீா்திருத்தங்களை அரசு அறிவித்துள்ளது. ஆனால், சந்தை அதற்கும் மேலும் எதிா்பாா்க்கிறது. சந்தை ஸ்திரத் தன்மையை விரும்புகிறது. இந்நிலையில், கரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் போதும், மத்திய அரசின் அனைத்து ஊக்க நடவடிக்கைகளும் அதன் தாக்கத்தைக் காட்டத் தொடங்கும் போதும்தான் சந்தை வலுவான லாபத்தைக் காணும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தற்போதைய நிலையில் சந்தையின் போக்கைக் கணிப்பது மிகவும் கடினம். சந்தையில் அதிக ஏற்றம், இறக்கம் இருக்கும் சூழ்நிலையில், முதலீட்டாளா்கள் தரமான, வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகளில் கவனம் செலுத்தலாம். சந்தை ஸ்திர நிலைமை அடையும் போது இந்தப் பங்குகள் நல்ல லாபத்தை அளிக்கும் என்கின்றனா் நிபுணா்கள்.