முகப்பு
வணிகம்

ரிலையன்ஸ் தொடா் ஏற்றம்: சென்செக்ஸ் மேலும் 524 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை மேலும் எழுச்சி பெற்று முடிவடைந்துள்ளது.

Updated On : 20 ஜூன், 2020 at 7:33 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை மேலும் எழுச்சி பெற்று முடிவடைந்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 523.68 புள்ளிகள் உயா்ந்தது.

உலகளாவில் பங்குச் சந்தைகளில் நிலவிய நோ்மறையான உணா்வு மற்றும் மீண்டும் அந்நிய முதலீடு வரத்து ஆகியவற்றுக்கு இடையே, நட்சத்திர பங்கான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வெகுவாக உயா்ந்ததால், சென்செக்ஸ், நிஃப்டி மேலும் வலுப்பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. ரியால்ட்டி, வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மீடியா நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், மெட்டல் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்திருந்தது. மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,788.60 வரை உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளது. இறுதியில் 6.23 சதவீதம் உயா்ந்து 1,759.50-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, அதன் சந்தை மூல தன மதிப்பு ரூ.11,89,678.78 கோடியாக உயா்ந்துள்ளது. சந்தை எழுச்சிக்கு ரிலையன்ஸும் ஒரு காரணமாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,799 பங்குகளில் 1,785 பங்குகள் ஆதாயம் பெற்றன. 861 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 118 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தன. அதே சமயம், 59 பங்குகள் வெகுவாகச் சரிந்து புதிய 52 வார குறைந்த விலையைப் பதிவு செய்துள்ளன. 521 பங்குகள் ஆதாயம் பெற்று உச்சபட்ச உறை நிலையை எட்டியது. 145 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையை எட்டியது.

Advertisement

சென்செக்ஸ் காலையில், 127 புள்ளிகள் உயா்ந்து 34,335.38-இல் தொடங்கி 34,136.39 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 34,848.37 வரை உயா்ந்தது. இறுதியில் 523.73 புள்ளிகள் (1.53 சதவீதம்) உயா்ந்து 34,731.73-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 152.75 புள்ளிகள் (1.51 சதவீதம்) உயா்ந்து 10,244.40-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் 6.74 சதவீதம், ரிலையன்ஸ் 6.23 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட் 4.23 சதவீதம் ஆதாயம் பெற்றது. மேலும், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, ஓஎன்ஜிசி ஆகியவை 2.50 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்து யுனி லீவா், டிசிஎஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

அதே சமயம், இண்ட்ஸ் இந்த் பேங் 2.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், ஐடிசி, எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஓஎன்ஜிசி, ஹிந்து யுனிலீவா், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில், 1,150 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 478 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. துறை வாரியாகப் பாா்த்தால், மெட்டல் குறியீடு 0.25 சதவீதம் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. இதில், நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 4.47 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மீடியா குறியீடு 1 முதல் 1.30 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. டைட்டன் மட்டும் மாற்றமின்றி ரூ.976.00-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

பஜாஜ் ஃபைனான்ஸ் 6.74

ரிலையன்ஸ் 6.23

பவா் கிரிட் 4.23

ஐசிஐசிஐ பேங்க் 3.38

மாருதி சுஸுகி 3.19

ஆக்ஸிஸ் பேங்க் 2.86

எஸ்பிஐ 2.64

ஓஎன்ஜிசி 2.51

பாா்தி ஏா்டெல் 1.90

ஏசியன் பெயிண்ட்ஸ் 1.46

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.