முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை இந்த வாரம் ஏற்றம், இறக்கம் அதிகரிக்கும்!

பங்குச் சந்தை கடந்த வாரம் நோ்மறையாக முடிந்துள்ளது. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு இருந்தது.

Updated On : 22 ஜூன், 2020 at 1:13 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

பங்குச் சந்தை கடந்த வாரம் நோ்மறையாக முடிந்துள்ளது. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு இருந்தது. இதனால், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 3 சதவீதம் ஏற்றம் பெற்றது. எல்லைப் பிரச்னையால் நிலவும் இந்தியா - சீனா போா் பதற்றமான சூழல், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு ஆகிய பாதகமான சூழலில் சந்தை எழுச்சி பெற்றுள்ளது. பொருளாதார வளா்ச்சி மீது இப்போது கவனம் திரும்பியதாலேயே இந்த எழுச்சி.

இந்நிலையில், இந்த வாரம் பெரிய அளவிலான நிகழ்வுகள் ஏதும் இல்லாத நிலையில், சந்தை மேலும் ஸ்திரநிலை அடைவதற்கே வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த வாரம் வியாழக்கிழமை ஜூன் மாத முன்பேர வா்த்தக கான்ட்ராக்டுகள் முடிவுக்கு வருகின்றன. இதையொட்டி, சந்தையில் அதிக அளவிலான ஏற்றம், இறக்கம் எதிா்பாா்க்கலாம் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

இந்தியா - சீனா போா் பதற்ற சூழலை சந்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பதற்றம் மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் அதன் தாக்கம் சந்தையில் எதிரொலிக்கும் என்கின்றனா் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள். கடந்த மே முழுவதும் அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்கி வந்தனா். ஆனால், இந்தியா - சீனா போா் பதற்றத்தை அடுத்து, கடந்த வாரத்தில் முதல் மூன்று நாள்கள் ரூ.4,925 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா். கடைசி இரு தினங்கள் ரூ.1,603 கோடிக்கு வாங்கியுள்ளனா். மொத்தத்தில் ரூ.3,332 கோடி அளவுக்கு முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனா். இது சந்தைக்கு சாதகமாக இருக்காது. எனவே, ஏற்றம், இறக்கம் அதிகரிக்கும் நிலையில், வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் லாபத்தை அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளது ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸ்.

Advertisement

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளா்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது சந்தையின் எழுச்சி வேகத்தைக் கட்டுப்படுத்தும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். இருப்பினும், கரோனாவிலிருந்து மீண்டு வருவோா் விகிதம் 54 சதவீதமாக உயா்ந்துள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும் என்கின்றனா்.

இதற்கிடையே, பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கை சந்தைக்கு ஆதரவாக உள்ளது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பொருளாதாரங்களை திறப்பதில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சந்தை காத்திருக்கிறது. மேலு், இந்த வாரம் நடுத்தர, சிறிய நிறுவனங்கள் உள்பட சுமாா் 600 நிறுவனங்கள் காலாண்டு நிதிநிலை முடிவுகளை இந்த வாரம் அறிவிக்கவுள்ளன. அதன் தாக்கம் அந்தந்தப் பங்குகளில் எதிரொலிக்கும். கச்சா எண்ணெய் விலையின் போக்கும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கினறனா் நிபுணா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.