விரைவாக வெளியேறிய அந்நியமுதலீடு!
இந்திய பங்குச் சந்தைகளை பெரும்பாலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ), அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) மற்றும் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனத்தினர் உள்ளிட்டோர்தான் வழிநடத்தி
இந்திய பங்குச் சந்தைகளை பெரும்பாலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ), அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) மற்றும் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனத்தினர் உள்ளிட்டோர்தான் வழிநடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச்) அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது புள்ளி விவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், ஏப்ரலிலும் மும்பை பங்குச் சந்தையில் வகைப்படுத்தப்பட்டுள்ள துறைகளில் சுமார் 24 துறைகளில் பங்குகளை அவர்கள் விற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பரவல் விஸ்வரூபம்
கடந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 6.3 பில்லியன் அளவுக்கு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், உலகெங்கிலும் கரோனா தொற்று பரவல் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் சரிவு ஏற்படத் தொடங்கியதும் கடந்த மார்ச்சில் அதிக அளவு பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர்.
பாதுகாப்பான முதலீடு
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, நிதிச் சந்தைகளில் கரோனாவின் தாக்கத்தால் நிச்சயமற்ற தன்மை ஆகியவை அந்நிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி நகர வழிவகுத்துள்ளன. அதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகள் போன்ற ஆபத்தான முதலீட்டு இடங்களில் இருந்து விரைவாக வெளியேற அவர்கள் தீர்மானித்ததாக நிதிச் சேவை நிறுவனமான மார்னிங்ஸ்டார் தெரிவித்துள்ளது.
மூலதன பங்களிப்பில் சரிவு
இதனால், ஒட்டுமொத்தமாக, மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் எஃப்.பி.ஐ.க்கள் இந்திய பங்குச் சந்தைகளில் நிகர விற்பனையாளர்களாக மாறினர். எஃப்.பி.ஐ. முதலீடுகளின் மதிப்பு 281 பில்லியன் டாலராக இருந்தது. இது டிசம்பர் காலாண்டில் பதிவான 432 பில்லியன் டாலர்களை விட கணிசமான அளவு குறைவாகும். இந்த முதலீட்டு அளவு கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவானதாகும். முந்தைய குறைந்த அளவு 2014, மார்ச் மாத இறுதியில் 238 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, இந்திய பங்குச் சந்தையில் எஃப்.பி.ஐ.க்களின் மூலதன பங்களிப்பு முந்தைய காலாண்டில் இருந்த 19.8 சதவீதத்திலிருந்து 18.7 சதவீதமாகக் குறைந்தது.
செயல்பாட்டில் சிரமம்
இதற்கிடையே, முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது நிகர வெளியேற்றத்தின் அளவு கணிசமாகக் குறைந்திருந்தாலும், அந்நிய முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத்திலும் இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்கள் அந்த மாதம் முழுவதும் 904 மில்லியன் டாலர் அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர். இந்தியாவில் கரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால், சிறப்பாகச் செயல்படுவது மிகவும் சிரமம் எனக் கருதிய அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் சந்தைகளில் முதலீடு
இச்சூழ்நிலையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக நிகர விற்பனையாளர்களாக இருந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகளில் பணப் பிரிவில் இருந்து ரூ.5,208.50 கோடி அளவுக்கு பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். பங்குச் சந்தை மார்ச் மாத சரிவுக்குப் பிறகு ஏப்ரலில் 23 சதவீத எழுச்சி பெற்றது. ஆனால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை உள்ளூர் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பியதால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை கண்டு கொள்ளாமல் விட்டனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் (5.7 சதவீதம்) அவர்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்காக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது மேற்கொள்ளும் உத்வேக நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளன. இதனால், மே மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில். இந்திய பங்குச் சந்தைகளில் 2.8 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து கடந்த 4 மாதங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் விரைவாக வெளியேறியதற்கு கரோனா முக்கியப் பங்கு வகித்துள்ளது என்பதே உண்மை...!
கடந்த ஏப்ரலில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை விற்று வெளியேறிய துறைகள்:
ர்மசூட்டிக்கல்ஸ் மற்றும் பயோ டெக்னாலஜிஸ் - ரூ.1,942 கோடி
ஆட்டோமொபைல்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் - ரூ.1,923 கோடி
மென்பொருள் மற்றும் சேவைகள் - ரூ.1,278 கோடி
டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடைகள் - ரூ.1,073 கோடி
பயன்பாட்டுத் துறை - ரூ.1,005 கோடி
பைனான்சியல் சர்வீசஸ் வங்கி-நிதிநிறுவனங்கள் - ரூ.753 கோடி
கடந்த ஏப்ரலில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை வாங்கிய துறைகள்
வீட்டு உபயோகப் பொருள்கள் - ரூ.2,816 கோடி
எண்ணெய் மற்றும் எரிவாயு - ரூ.1,320 கோடி
நுகர்வோர் சாதனங்கள் - ரூ.379 கோடி
ஹெல்த்கேர் சேவைகள் - ரூ.329 கோடி
மீடியா - ரூ.179 கோடி
உணவு, பானம், புகையிலை - ரூ.112 கோடி