பேருந்து கூண்டு கட்டும் தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என தொழில்முனைவோர் வலியுறுத்துகின்றனர்.
பல்வேறு தொழில் வளம் வாய்ந்த கரூர் நகரின் முக்கிய தொழிலாக இருக்கும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி, கொசுவலை தயாரிப்புக்கு அடுத்தபடியாக முக்கிய வர்த்தகத்தைக் கொண்டதாக பேருந்துக்கு கூண்டு கட்டும் தொழில் உள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரம், கேரளம், பாண்டிச்சேரி, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி போன்ற மாநிலங்களின் பேருந்துகளுக்கும் இங்குதான் கூண்டு கட்டப்படுகிறது.
கரூரில் செயல்படும் சுமார் 65 நிறுவனங்களில் நேரிடையாக சுமார் 30,000 தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 40,000 தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
தரச்சான்றிதழ் நிபந்தனை: நாடு முழுவதும் விபத்தில் சிக்கும் பேருந்துகள் தரமின்றி இருந்ததால் அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதையடுத்து இந்திய அரசின் தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான(அராய்), இனி பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் ஐஎஸ்ஐ, ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து மட்டுமே உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்து பேருந்துகளுக்கு கூண்டு கட்ட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.
இந்த நிபந்தனைக்கு முன் பேருந்துக்கு கூண்டு கட்டும் பெரும்பாலான நிறுவனங்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற போல்ட், நட்,
அலுமினிய ஷீட் போன்றவற்றையே பயன்படுத்தி வந்தன.
தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் கடும் கட்டுப்பாட்டினால் தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்கள் கொள்முதல் செய்து பேருந்துகளுக்கு கூண்டு கட்டப்படுவதால் முன்பு ரூ.11 லட்சத்திற்கு பேருந்துக்கு கூண்டு கட்டிய நிலையில் தற்போது ரூ.18 முதல் ரூ.19 லட்சம் வரை செலவிடப்படுகிறது.
உதிரிபாகங்கள் வரவில்லை:
மேலும், அராய் நிறுவனம் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் முதன்முதலாகக் கூண்டு கட்டும்போது, அதை அராய் நிறுவனத்தில் பரிசோதனைக்கு அனுப்பி, தரச் சான்றிதழ் பெற்ற பின்புதான் பேருந்துகளுக்கு கூண்டு கட்டப்படுவதால், கடந்த 2008-க்கு முன் கரூரில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது சுமார் 65 நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் கடந்த 55 நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை. இதனால், கூண்டு கட்டும் நிறுவனங்களில் தொழில் நடைபெறாமல் முடங்கியுள்ளது. அதன் காரணமாக, சுமார் 70,000 தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.
கரூர் பேருந்து கூண்டு கட்டும் சங்கத்தின் முன்னாள் தலைவர் பழனிசாமி கூறியது: மத்திய அரசு பொதுமுடக்க தளர்வில் மாற்றம் கொண்டு வந்து நகர்ப் பகுதியில் 30 சதவீதத் தொழிலாளர்களும், கிராமப்புறங்களில் 50 சதவீதத்தொழிலாளர்களுடன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படலாம் எனக் கூறியுள்ளது. பேருந்துக்கு கூண்டு கட்டும் மூலப்பொருட்களான உதிரிப்பாகங்கள் வரவே இல்லை. பொதுமுடக்கத்தால் உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டது.
3 மாதங்களுக்கு மேலாகும்: பேருந்து கூண்டு கட்டுவதற்கு மத்திய அரசின் அராய் கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால் ஐஎஸ்ஐ, ஐஎஸ்ஓ ஆகிய முத்திரை கொண்ட உதிரிபாகங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலைகள் பொதுமுடக்கத்தால், செயல்பாடின்றி முடங்கிக்கிடக்கின்றன. இப்போதுதான் சில ஆலைகள் மட்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இனி அவை உற்பத்தி செய்து, எங்கள் கையில் கிடைப்பதற்குள் மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிடும். அதுவரை தொழிலை நடத்த இயலாது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலைதான் உள்ளது.
குறிப்பாக பேருந்துக்கு கூண்டு கட்டுவதில் முக்கிய மூலப்பொருட்களான அலுமினிய ஷீட், பீடிங், இரும்பு, ரப்பர், டோர் மெக்கானிசம், காமிரா, நட், போல்ட்டுகள் ஆகியன பெங்களூருவில் இருந்து வாங்குகிறோம். இவைதவிர ஆந்திரம், தில்லி போன்ற மாநிலங்களில் இருந்து பேருந்துகளுக்குள் பயன்படுத்தப்படும் வயரிங் செய்வதற்கான பொருட்களை கொள்முதல் செய்கிறோம். ஆனால், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்யப்படும் அனைத்து மாநிலங்களும் தற்போது பொது முடக்கத்தால் முடங்கியுள்ள நிலையில், உதிரி பாகம் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.
சலுகைகள் எதிர்பார்ப்பு: இதனால், அனைத்து உதிரிபாகங்களும் கிடைக்கவில்லை. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இருந்து பெற்றிருந்த பல்வேறு ஆர்டர்களையும் செய்துகொடுக்க முடியவில்லை.
பொதுமுடக்க உத்தரவால் வங்கிக்கடனுக்கான வட்டியைக் கூட செலுத்த இயலவில்லை. தொழிலாளர்களுக்கு ஊதியம் மட்டுமின்றி, அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான தொகையையும் அவர்களது பெயரில் செலுத்த இயலவில்லை.
பேருந்துக்கு கூண்டு கட்டும் தொழில் நிலைத்து நிற்க உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலைக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்கி உடனே உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
நாங்கள் தொழிலுக்கு வாங்கிய கடனுக்கான வட்டியை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தள்ளுபடி செய்ய வேண்டும். உதிரிபாகங்கள் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.