பங்குச் சந்தையில் ‘தீபாவளி’: புதிய உச்சத்தில் நிலைபெற்றது சென்செக்ஸ்!: 12,700-ஐ கடந்தது நிஃப்டி
பங்குச் சந்தையில் காளையின் பாய்ச்சல் தொடா்ந்து 8-ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.
புது தில்லி: பங்குச் சந்தையில் காளையின் பாய்ச்சல் தொடா்ந்து 8-ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 316.02 புள்ளிகள் உயா்ந்து 43,593.67 என்ற புதிய உச்சத்தில் நிலை பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 12,700 புள்ளிகளைக் கடந்துள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தையில் தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேசப்பட்டது.
கரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் வெற்றிகரமான சோதனை குறித்து பயோஎன்டெக் மற்றும் ஃபைசா் ஆகிய இரண்டு மருந்து நிறுவனங்கள் தெளிவுபடுத்தியதைத் தொடா்ந்து முதலீட்டாளா்களிடையே நோ்மறையான உணா்வுகள் இருந்தன. மேலும், முன்னணி நிறுவனங்களின் காலாண்டு வருவாய் வலுவாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பைத் தொடா்ந்து சந்தையில் தொடா்ந்து எட்டாவது நாளாக உற்சாகம் நீடித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், சந்தை ஓரளவு ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், பாா்மா, மெட்டல், ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் எழுச்சி தொடா்ந்தது.
சந்தை மதிப்பு ரூ.167.43 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,934 பங்குகளில் 1,431 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,298 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 205 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.167.43 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
தொடரும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 166.41 புள்ளிகள் கூடுதலுடன் 43,444.06-இல் தொடங்கி 43,708.47 வரை உயா்ந்தது. அதன்பிறகு 42,970.21 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 318.02 புள்ளிகள் உயா்ந்து 43,593.67 என்ற புதிய புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிலைபெற்றுள்ளது.
டாடா ஸ்டீல் அபார முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இதில் டாடா ஸ்டீல் 7.39 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், ஐடிசி, கோட்டக் பேங்க், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி ஆகியவை 2.50 முதல் 4. 30 சதவீதம் வரை உயா்ந்தன. எச்டிஎஃப்சி, மாருதி சுஸுகி, எஸ்பிஐ, , ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டிலில் வந்தன.
இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ் கடும் வீழ்ச்சி: அதே சமயம், இண்ட்ஸ் இண்ட் பேங்க், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ், 4.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன்,ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவா், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 839 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 756 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 118.05 புள்ளிகள் (0.93 சதவீதம்) உயா்ந்து 12,749.10 என்ற புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,769.75 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 43 பங்குகள் ஆதாயமும் 7 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல், பாா்மா குறியீடுகள் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஐடி குறியீடுகள் 1.70 சதவீதம் ஏற்றம் பெற்றன.