முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் மேலும் 113 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும்  பங்குச் சந்தை  ஏறுமுகத்தில் இருந்தது.

Updated On : 21 அக்டோபர், 2020 at 2:51 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:10 PM

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும்  பங்குச் சந்தை  ஏறுமுகத்தில் இருந்தது. இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 112.77 புள்ளிகள் உயர்ந்து 40,544.37-இல் நிலைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, சென்செக்ஸ் தொடர்ந்து 3-ஆவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது. 
உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்றிருந்த நிலையில், அதன் தாக்கம்  இந்தியச் சந்தைகளிலும் தொடர்ந்தது.  காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல்  ரியால்ட்டி, ஐ.டி., மீடியா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. மெட்டல், எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. இருப்பினும், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை வெகுவாக உயர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் பெற முக்கியக் காரணமாக இருந்தன.
1,373 பங்குகள் ஏற்றம்:  மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,849 பங்குகளில் 1,373 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,316 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 160 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 
வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு  ரூ.52 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.159.89 லட்சம் கோடியாக இருந்தது.  பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.47 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.30 சதவீதம் உயர்ந்தன.
தொடர்ந்து ஏறுமுகம்:  சென்செக்ஸ்  காலையில் 11.31 புள்ளிகள் குறைவுடன்  40,420.29-இல் தொடங்கி 40,305.59 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 40,732.01 வரை உயர்ந்தது.  இறுதியில் 112.77 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயர்ந்து 40,544.37-இல் நிலைபெற்றது. 
ஹெச்சிஎல் டெக் அபாரம்:  சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 4.19 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.  மேலும், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. 
ஓஎன்ஜிசி வீழ்ச்சி: அதே சமயம், ஓஎன்ஜிசி 2.67 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவர்கிரிட், என்டிபிசி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...:  தேசிய பங்குச் சந்தையில் 930 பங்குகள்  ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 688 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 23.75  புள்ளிகள் (0.20 சதவீதம்) உயர்ந்து  11,896.80-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஏற்றம் பெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஆக்ஸிஸ் வங்கி மாற்றமின்றி 492.95-இல் நிலைபெற்றது.  நிஃப்டி ரியால்ட்டி குறியீடு  3.94 சதவீதம் உயர்ந்தது. ஐ.டி., மீடியா குறியீடுகள் முறையை 1.50 சதவீதம் மற்றும் 2 சதவீதம் உயர்ந்தன. ஆனால், மெட்டல், எஃப்எம்சிஜி குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.