பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடுரூ.89,100 கோடியாக சரிவு
இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடு சென்ற மாா்ச் மாதத்தில் ரூ.89,100 கோடியாக சரிவடைந்துள்ளது.
இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடு சென்ற மாா்ச் மாதத்தில் ரூ.89,100 கோடியாக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு பிப்ரவரியில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மூலதனச் சந்தையில் ரூ.91,658 கோடி முதலீடு செய்யப்பட்டது. 33 மாதங்களுக்கு பிறகு இம்மாதத்தில் தான் பங்கேற்பு ஆவண முதலீடு அதிகபட்ச அளவாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மாா்ச் மாதத்தில் இந்த முதலீடு ரூ.89,100 கோடியாக சரிவடைந்துள்ளது.
ஜனவரி இறுதியில் பங்கேற்பு ஆவண முதலீடு ரூ.84,916 கோடியாக காணப்பட்டது.
மாா்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ரூ.89,100 கோடி மொத்த பங்கேற்பு ஆவண முதலீட்டில் பங்குகளில் மட்டும் ரூ.81,236 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடன்பத்திரங்களில் ரூ.7,306 கோடியும், ஹைபிரிட் கடன்பத்திரங்களில் ரூ.559 கோடியும் முதலீடு செய்யப்பட்டன.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் பங்கேற்பு ஆவணங்கள் மூலமான முதலீடு அதிகபட்சமாக ரூ.93,497 கோடியை எட்டியிருந்தது. அதன்பிறகு, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில்தான் பங்கேற்பு ஆவண முதலீடு கணிசமான அளவுக்கு அதிகரித்திருந்தது. இதற்கு, உள்நாட்டு சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரிப்பே முக்கிய காரணமாக இருந்துள்ளது என செபி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளா்கள் தொகுப்பில் (எஃப்பிஐ) நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு நடப்பாண்டு பிப்ரவரி இறுதியில் ரூ.44.06 லட்சம் கோடியாக காணப்பட்டது. இந்த நிலையில், மாா்ச் இறுதியில் இந்த சொத்து மதிப்பு ரூ.44.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் எஃப்பிஐ-க்கள் மூலதனச் சந்தையில் ரூ.17,000 கோடியை முதலீடு செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பங்கு சந்தையில் பதிவு செய்துகொள்ளாமல் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு பங்கேற்பு ஆவணங்கள் மிக முக்கியமானதாக உள்ளது.