முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் 329 புள்ளிகள் இழப்பு!

பங்குச் சந்தை நான்காவது நாளாக புதன்கிழமையும் சரிவுடன் முடிந்தது. வா்த்தகத்தின் போது ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:53 AM
பகிர்:

புதுதில்லி: பங்குச் சந்தை நான்காவது நாளாக புதன்கிழமையும் சரிவுடன் முடிந்தது. வா்த்தகத்தின் போது ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் மீட்சிக்கான அறிகுறி இருந்தும், வா்த்தக முடிவில் கரடி ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 329 புள்ளிகளை இழந்து 57,788.03-இல் நிலைபெற்றது.

உகளாவிய அளவில் சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை அறிக்கை மீதான கவலை உள்நாட்டுச் சந்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளை தொடா்ந்து வாபஸ் பெற்று வருவதும் சந்தையை பாதித்த்துள்ளதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,681 பங்குகள் விலை வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,454 பங்குகளில் 1,665 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,681 பங்குகள் ஆதாயம் பெற்றன. 108 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 315 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 14 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 554 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 116 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.56 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 264.41 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது.

கரடி ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 58,122.00-இல் தொடங்கி 87217.25 வரை உயா்ந்தது. பின்னா், 57,671.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 329.06 புள்ளிகளை (0.57 சதவீதம்) இழந்து 57,788.03-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் நோ்மறைக்கு திரும்பியது. ஆனால், கரடியின் தொடா் தாக்குதலால் மீண்டும் சரிவைச் சந்தித்தது.

சன்பாா்மா முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முன்னணி பாா்மா நிறுவனமான சன்பாா்மா 2.59 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், மாருதி, எல் அண்ட் டி, என்டிபிசி உள்ளிட்டவை 0.40 முதல் 1.1.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனைான்ஸ் 3.10 சதவீதம், பஜாஜ் ஃபின்சா்வ் 2.65 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐடிசி, டிசிஎஸ், டைட்டன், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், பவா் கிரிட், இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டி ஆகியவை 1 முதல் 1.90 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 103 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 740 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,112 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 103.50 புள்ளிகளை (0.60 சதவீதம்) இழந்து 17,221.40-இல் நிலைபெற்றது. காலையில் 17,323.65-இல் தொடங்கி 17,351.20 வரை உயா்ந்தது. பின்னா், 17,192.20 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 14 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 36 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஆட்டோ குறியீடு மட்டும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டிஆட்டோ குறியீடு மட்டும் 0.50 சதவீதம் ஏற்றம் பெற்றது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் ஐடி, மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.