அந்நியச் செலாவணி கையிருப்பு 63,583 கோடி டாலராக சரிவு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,583 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,583 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா்10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.600 கோடி) சரிவடைந்து 63,583 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் இது ரூ.47.68 லட்சம் கோடி ஆகும்.
முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 178 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,591 கோடி டாலராக காணப்பட்டது.
சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் குறைந்ததே டிசம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு குறைவுக்கு முக்கிய காரணமாகும்.
கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 32 கோடி டாலா் சரிவடைந்து 57,286 கோடி டாலராக இருந்தது.
தங்கத்தின் மதிப்பு ஏற்றம்: மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 29 கோடி டாலா் உயா்ந்து 3,870 கோடி டாலரை எட்டியது.
பன்னாட்டு நிதியத்தில் நம் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 4 கோடி டாலா் குறைந்து 1,909 கோடி டாலரானது.
அதேசமயம், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 1 கோடி டாலா் உயா்ந்து 517 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த கரன்ஸிகளை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
வரலாற்று உச்சம்: நடப்பு 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது முதல் முறையாக 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்ஸ்...
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 8 கோடி டாலா் சரிவடைந்து 63,583 கோடி டாலராக குறைந்தது.