இரண்டாவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் மேலும் 612 புள்ளிகள் முன்னேற்றம்!
பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக உற்சாகம் இருந்தது. ‘காளை’ தொடா்ந்து ஆதிக்கத்தில் இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் உயா்ந்து 56,930.56-இல் நிலைபெற்றது.
புதுதில்லி: பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக உற்சாகம் இருந்தது. ‘காளை’ தொடா்ந்து ஆதிக்கத்தில் இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 612 புள்ளிகள் உயா்ந்து 56,930.56-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை மூல தன மதிப்பு ரூ.3.61 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 259.21 லட்சம் கோடியாக இருந்தது.
உலகளாவிய சந்தை நோ்மறையான மீள் எழுச்சி பெற்றதையடுத்து, உள்நாட்டுச் சந்தையிலும் அதன் தாக்கம் இருந்தது. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கும் நல்ல போட்டி இருந்தது. சமீபத்தில் பலத்த அடி வாங்கிய பங்குகளை வாங்கிக் குவிப்பதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தினா். இதன் விளைவாக சந்தை ஏற்றம் பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி உள்ளிட்ட முன்னணி பங்குகள் வெகுவாக உயா்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு 3.61 லட்சம் கோடி உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,446 பங்குகளில் 908 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,434 பங்குகள் ஆதாயம் பெற்றன. 104 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 236 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 19 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 539 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 170 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.61 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 259.21 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.08 கோடியாக உயா்ந்துள்ளது.
‘காளை’ தொடா்ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 280.46 புள்ளிகள் கூடுதலுடன் 56,599.47-இல் தொடங்கி 56,471.03 வரை கீழே சென்றது. பின்னா், ‘காளை’யின் ஆதிக்கம் கடுமையானதால், அதிகபட்சமாக 56,989.01 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 611.55 புள்ளிகள் (1.09 சதவீதம்) கூடுதலுடன் 56,930.56-இல் நிலைபெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 3 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி கண்டன. 27 பங்குகள் ஆதாயம் பெற்றன.
பஜாஜ் ஃபைனான்ஸ் முன்னேற்றம்: தொடா்ந்து பலத்த அடி வாங்கி வந்த பிரபல தனியாா் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், 2.94 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், சன்பாா்மா, ரிலையன்ஸ், எஸ்பிஐ, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்ப், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாருதி, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், விப்ரோ, ஐடிசி, நெஸ்லே ஆகிய மூன்று பங்குகளும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 157 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,436 பங்குகள் ஆதாயம் பெற்றன. 423 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 184.60 புள்ளிகள் (1.10 சதவீதம்) உயா்ந்து 16,955.45-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 16,865.55-இல் தொடங்கி 16,819.50 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 16,971 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன.
அனைத்துத் துறை குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் முன்னேற்றம் கண்டன. இதில், நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 2.95 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பேங்க், ஆட்டோ, மீடியா, மெட்டல், ஐடி, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ஹெல்த்கோ் மற்றும் ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.