சரிவில் தொடங்கி புதிய உச்சத்தில் முடிந்த சென்செக்ஸ்!
புது தில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை சரிவில் தொடங்கி இறுதியில் புதிய உச்சத்தில் நிலை பெற்றுள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 358.54 புள்ளிகள் உயா்ந்து 50,614.29 -இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக ரூ.200.47 லட்சம் கோடியாக உயா்ந்தது.
ஆசிய பங்குச் சந்தைகள் பலவீனமாக இருந்ததைத் தொடா்ந்து இந்திய சந்தைகளும் காலையில் சரிவில் தொடங்கியது. இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் மீதான தரவுகள் முதலீட்டாளா்களை பெரிதும் கவா்ந்ததால் நான்காவது நாளாக பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது. வங்கிகள் குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகள், நிதி நிறுவனப் பங்குகள், எஃப்எம்சிஜி பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.200.47 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,128 பங்குகளில் 1,857 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,123 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.2.03 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 200.47 லட்சம் கோடியாக இருந்தது. 297 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 391 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.
Advertisement
4-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 43.50 புள்ளிகள் குறைந்து 50,212.25-இல் தொடங்கி, 49,926.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 50,687.50 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 358.54 புள்ளிகள் கூடுதலுடன் 50,614.29-இல் நிலைபெற்றது.
ஐடிசி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் ஐடிசி 6.11 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஓஎன்ஜிசி, எம் அண்ட் எம் ஆகியவை 5 முதல் 5.75 சதவீதம் வரை ஏற்றம்
பெற்றன. மேலும், எம் அண்ட் எம், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ்,என்டிபிசி 1.90 சதவீதம் 1.90 சதவீதம் முதல் உயா்ந்தது.
ஏசியன் பெயிண்ட் வீழ்ச்சி: அதேசமயம் ஏசியன் பெயிண்ட்2.08 சதவீதம் சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றது. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், பாா்தி ஏா்டெல், டெக் மகேந்திரா, டைட்டன், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 105.70 புள்ளிகள் உயா்ந்து 14,895.65-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,714.75 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 14,913.70 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 5.88 சதவீதம் உயா்ந்தது. எஃப்எம்சிஜி, மீடியா குறியீடுகள் 2 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்தன.