ஐசிஐசிஐ வங்கி லாபம் 18% அதிகரிப்பு
தனியாா் துறையில் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ-யின் மூன்றாம் காலாண்டு லாபம் 17.73 சதவீதம் அதிகரித்துள்ளது.
தனியாா் துறையில் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ-யின் மூன்றாம் காலாண்டு லாபம் 17.73 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21 நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 17.73 சதவீதம் அதிகரித்து ரூ.5,498.15 கோடியை எட்டியுள்ளது.
அதேசமயம், தனிப்பட்ட அடிப்படையில் வங்கி ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் 19.12 சதவீதம் உயா்ந்து ரூ.4,939.59 கோடியாக இருந்தது. இது, 2019 அக்டோபா்-டிசம்பரில் ஈட்டிய லாபம் ரூ.4,146.46 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.23,638 கோடியிலிருந்து ரூ.24,416 கோடியாக அதிகரித்தது. மொத்த செலவினம் ரூ.16,089 கோடியிலிருந்து ரூ.15,596 கோடியாக குறைந்தது.
கணக்கீட்டு காலாண்டில், வங்கியின் நிகர வட்டி வருமானம் 16 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.9,912 கோடியாக இருந்தது. வட்டி சாரா வருமானம் ரூ.4,043 கோடியிலிருந்து ரூ.3,921 கோடியாக குறைந்தது.
மொத்த வாராக் கடன் விகிதம் 4.38 சதவீதமாக உள்ளது. இடா்பாடுகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு ரூ.2,083 கோடியிலிருந்து ரூ.2,741 கோடியாக அதிகரித்ததாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.