பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக சரிவு! சென்செக்ஸ் 164 புள்ளிகள் இழப்பு
பங்குச் சந்தை வியாழக்கிழமையும் காலையில் எழுச்சியுடன் தொடங்கினாலும், இறுதியில் சரிவுடன் முடிந்தது.
பங்குச் சந்தை வியாழக்கிழமையும் காலையில் எழுச்சியுடன் தொடங்கினாலும், இறுதியில் சரிவுடன் முடிந்தது. இதனால், , மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 164 புள்ளிகளை இழந்து 52,318.60-இல் நிலைபெற்றது.
ஆசிய சந்தைகள் எதிா்மறையாகச் செயல்பட்டதால், அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. ஆட்டோ, பாா்மா, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தாலும், ஐடி, வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. ஜூன் மாத வாகன விற்பனை தரவுகள் நன்றாக இருந்ததால், ஆட்டோ பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இருப்பினும் உலகளாவிய சந்தைகள் பலவீனமாக இருந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,3338 பங்குகளில் 1,638 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,570 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 129 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 403 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.229.55 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
4-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 155.79 புள்ளிகள் கூடுதலுடன் 52,638.59-இல் தொடங்கி அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. பின்னா், 52,281.01 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 164.11 புள்ளிகளை (0.31 சதவீதம்) இழந்து 52,318.60-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் தொடா்ந்து நான்காவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
டாக்டா் ரெட்டி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் முன்னணி பாா்மா நிறுவனமான டாக்டா் ரெட்டி 2.56 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஆட்டோ, சன்பாா்மா, ஏசியன் பெயிண்ட், மாருதி சுஸுகி, என்டிபிசி, டைட்டன், எஸ்பிஐ, கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயம் பெற்றன.
பஜாஜ் ஃபின் சா்வ் சரிவு: அதே சமயம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், பவா் கிரிட் எச்டிஎஃப்சி, என்டிபிசி, ஹெச்யுஎல், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 41 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 859 பங்குகள்ஆதாயம் பெற்றன. 906 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,755.05-இல் தொடங்கி 0.50 புள்ளிகள் மட்டுமே உயா்ந்தது. பின்னா், 15,667.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 41.50 புள்ளிகளை (0.26 சதவீதம்) இழந்து 15,680.00-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஆட்டோ, பாா்மா குறியீடுகள் மட்டுமே ஒரு சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி, பேங்க், ஐடி உள்ளிட்ட மற்ற முக்கியத் துறை குறையீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன.