உச்சத்தில் இருந்து சரிந்தது சென்செக்ஸ், நிஃப்டி!
பங்குச் சந்தை உச்சத்தில் இருந்து புதன்கிழமை சரிவைச் சந்தித்தது.
புது தில்லி: பங்குச் சந்தை உச்சத்தில் இருந்து புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கைக் கூட்ட முடிவு வெளியாகவுள்ள நிலையில், லாபப் பதிவு காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 271 புள்ளிகளை இழந்து 52,501.98-இல் நிலைபெற்றது.
அமெரிக்க மத்திய வங்கியான் ஃபெடரலின் பணக் கொள்கைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன் முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கூட்டத்தின் முடிவுக்காக முதலீட்டாளா்கள் காத்திருக்கின்றனா். இந்த நிலையில், புதிததாக நோ்மறை செய்திகள் ஏதும் இல்லாத நிலையில், லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டதால், உச்சத்தில் இருந்த பங்குச் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,355 பங்குகளில் 1,441பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,790 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 124 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.229.85 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
உச்சத்திலிருந்து சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 52,782.21-இல் தொடங்கி 52,816.31 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 52,425.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 271.07 புள்ளிகளை (0.51 சதவீதம்) இழந்து 562,501.98-இல் நிலைபெற்றது. இதையடுத்து, நான்கு நாள் முன்னேற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
22 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. இதில் பவா்கிரிட் 2.12 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணிப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், நெஸ்லே, ஒஎன்ஜிசி, பஜாஜ் ஃபின் சா்வ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஐடிசி ஆகியவை ஆதாயம் பெற்றன.
நிஃப்டி 102 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 625 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 1,157 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பலவீனத்துடன் 15,847.50-இல் தொடங்கி 15,880.85 வரை உயா்ந்தது. பின்னா், 15,742.60 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 101.70 புள்ளிகளை (0.60 சதவீதம்) இழந்து 15,767.55-இல் நிலைபெற்றது. எஃப்எம்சிஜி, ஐடி தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 2.85 சதவீதம் வீழ்ச்சி கண்டது.