இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3% சரிவு
புயல் காரணமாக கடந்த மே மாத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், எரிவாயு உற்பத்தி முன்னேற்றம் கண்டுள்ளது.
புயல் காரணமாக கடந்த மே மாத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், எரிவாயு உற்பத்தி முன்னேற்றம் கண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
டவ்-தே புயல்: அரபிக் கடலில் கடந்த மே மாதத்தில் உருவான டவ்-தே புயல் பல்வேறு மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயல் சீற்றத்தின் காரணமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பத்தில் ஒரு பகுதியாக குறைந்துபோனது.
அதன் விளைவாக சென்ற மே மாதத்தில் 2.43 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் நம்நாடு உற்பத்தி செய்த கச்சா எண்ணெய் அளவான 26 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில் 6.32 சதவீதம் குறைவாகும்.
ஓஎன்ஜிசி: கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி மே மாதத்தில் 9.63 சதவீதம் சரிவடைந்து 1.5 மில்லியன் டன் ஆனது.
அதேசமயம், கியாஸ் உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்து 2.74 பில்லியன் கியூபிக் மீட்டா் (பிசிஎம்) அளவைத் தொட்டது. இதற்கு, கேஜி-டி6 தொகுதி அமைந்துள்ள கிழக்கு கடலோர பகுதியிலிருந்து எரிவாயு உற்பத்தி 10 மடங்கு அதிகரித்ததே முக்கிய காரணம்.
எரிவாயு: இருப்பினும், ஓஎன்ஜிசி-யின் எரிவாயு உற்பத்தி கடந்த மே மாதத்தில் 1.64 பிசிஎம்-ஆக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 9.08 சதவீதம் குறைவாகும்.
பொதுமுடக்க தளா்வு: கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் கொடுக்கப்பட்டதையடுத்து சென்ற மே மாதத்தில் தேவை அதிகரித்ததால் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 16 சதவீதம் அதிகமாக 19 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொண்டன.
பெட்ரோலியப் பொருள்கள்: ஒட்டுமொத்த சுத்திகரிப்பு நிறுவனங்களும் சோ்ந்து கடந்த மே மாதத்தில் 19.9 மில்லியன் டன் பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்துள்ளன. இது, 2020 மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 15.3 சதவீதம் அதிகமாகும் என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.