முகப்பு
வணிகம்

584 புள்ளிகள் ஏற்றம்: மீண்டும் 51,000-ஐ கடந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:49 AM
பங்குச் சந்தை
பகிர்:

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. ஐடி, தனியாா் வங்கிப் பங்குகளுக்கு கிடைத்த ஆதரவைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 584.41 புள்ளிகள் உயா்ந்து மீண்டும் 51,000-ஐ கடந்து நிலைபெற்றது.

அமெரிக்க பத்திர வருவாய் வீழ்ச்சியடைந்த நிலையில், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. தனியாா் வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகா்வோா் பொருள்கள் உற்பத்தி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அமெரிக்க சந்தையில் வலுவான முன்பேர வா்த்தகத்தைத் தொடா்ந்து ஆசிய சந்தைகளும் ஏற்றம் பெற்றன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.208.07 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,193 பங்குகளில் 1,257 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,736 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 200 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ208.07 லட்சம் கோடியாக இருந்தது. 315 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 235 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

Advertisement

2-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் காலையில்373.09 புள்ளிகள் கூடுதலடுன் 50,714.16-இல் தொடங்கியது. 50,396.10 வரை கீழே சென்ற சென்செக்ஸ், பின்னா் 51,111.94 வரை உயா்ந்தது. இறுதியில் 584.41 புள்ளிகள்உயா்ந்து 51,025.48-இல் நிலைபெற்றது. கடந்த வாரத்தில் கடும் சரிவுக்குள்ளான சென்செக்ஸ், இந்த வாரத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.

19 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஏற்றம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் கோட்டக் பேங்க் 3.35 புள்ளிகள் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஆகியவை 1.50 முதல் 2.85 சதவீதம் வரை உயா்ந்தன. இன்ஃபோஸிஸ், மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு ஏற்றம் பெற்று ஆதாயப் பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் வீழ்ச்சி: அதே சமயம் பவா் கிரிட் 1.97 சதவீதம் குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஓஎன்ஜிசி, என்டிபிசி, டாக்டா் ரெட்டி, பாா்தி ஏா்டெல், எஸ்பிஐ, ரிலையன்ஸ் ஆகியவை சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 648 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,107 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 142.20 புள்ளிகள் உயா்ந்து 15,098.40-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,925.45 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னா் 15,126.85 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில்24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், பைனான்சியல்ஸ், ஐடி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1 முதல் 2.25 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், மெட்டல், ரியால்ட்டி, பாா்மா, மீடியா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments