சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக ஏற்றம்!
பங்குச் சந்தை மூன்றாவது நாளாகத் தொடா்ந்து புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. ஐடி, பாா்மா பங்குகளுக்கு கிடைத்த ஆதரவைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்
புது தில்லி: பங்குச் சந்தை மூன்றாவது நாளாகத் தொடா்ந்து புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. ஐடி, பாா்மா பங்குகளுக்கு கிடைத்த ஆதரவைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 254.03 புள்ளிகள் உயா்ந்து தொடா்ந்து இரண்டாவது நாளாக 51,000-க்கு மேலே நிலைபெற்றது.
அமெரிக்க சந்தையில் பத்திரங்களின் வருமானம் குறைந்து வரும் நிலையில், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. ஆசிய சந்தைகளும் ஏற்றம் பெற்றன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. முன்பேர வா்த்தகத்தில் நிஃப்டி, பேங்க் நிஃப்டி வாராந்திர கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வேண்டிய நாளாக இருந்ததால் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.209.27 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,157 பங்குகளில் 1,629 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1350 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 178 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.20 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ209.27 லட்சம் கோடியாக இருந்தது. 213 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 331 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.
Advertisement
3-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் காலையில்379.20 புள்ளிகள் கூடுதலுடன் 51,404.68-இல் தொடங்கி 51,430.43 வரை உயா்ந்தது. பின்னா் 51,048.93 வரை கீழே சென்றது. இறுதியில் 254.03 புள்ளிகள் உயா்ந்து 51,279.51-இல் நிலைபெற்றது. கடந்த வாரத்தில் கடும் சரிவுக்குள்ளான சென்செக்ஸ், இந்த வாரத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.
23 பங்குகள் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஏற்றம் பெற்றன. 7 பங்குகள் பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. பஜாஜ் ஃபைனான்ஸ் 2.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, இன்ஃோபஸிஸ், ஹெச்சிஎல் டெக், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 1.50 முதல் 2.20 சதவீதம் வரை உயா்ந்தன. ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்ககுளும் சிறிதளவு ஏற்றம் பெற்று ஆதாயப் பட்டியலில் வந்தன.
ஓஎன்ஜிசி வீழ்ச்சி: அதே சமயம் கடந்த சில நாள்களாக வெகுவாக உயா்ந்து வந்த ஓஎன்ஜிசி, இரண்டாவது நாளாக 2.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், ஐடிசி, எச்டிஎஃ்சி பேங்க், பவா் கிரிட், ரிலையன்ஸ், மாருதி, சுஸுகி ஆகியவையும் சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 967 பங்குகள் ஆதாயம் பெற்றன. 763 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 76.40 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயா்ந்து 15,174.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 15,218.45 வரை உயா்ந்த நிஃப்டி, ஒரு கட்டத்தில் 15,100.85 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் மெட்டல், ஐடி, பாா்மா குறியீடுகல் 1.50 முதல் 1.90 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் நல்ல ஆதரவு இருந்தது.