முகப்பு
வணிகம்

4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 341 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து நான்கு நாள்களாக மேல்நோக்கி ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி கண்டது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:50 AM
பகிர்:

தொடர்ந்து நான்கு நாள்களாக மேல்நோக்கி ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி கண்டது. ஐடி, நிதித் துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 341 புள்ளிகளை இழந்தது.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் வலுவிழந்த நிலையில் இருந்தன. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏற்றம் பெற்றிருந்த உள்நாட்டுச் சந்தைகளில் லாபப் பதிவு அதிகளவில் இருந்தது. குறிப்பாக ஐடி, பார்மா, நிதித் துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. உலகளவில் உலோகங்கள் உள்பட சில பொருள்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சப்பாடு சந்தையில் ஏற்பட்டுள்ளது.
 சீனா
 வின் பணவீக்கம் குறித்த தரவுகளும் சந்தையில் எதிரொலித்துள்ளது.
 இதைத் தொடர்ந்து, விலையுயர்ந்த நிலையில் லாபப் பதிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் அடி வாங்கியதால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவைச் சந்தித்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடி உயர்வு:
 மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,239 பங்குகளில் 2,845 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,204 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 190 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 349 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 476 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 153 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூலதன மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.213.42 லட்சம் கோடியாக இருந்தது.
 நிலையற்ற தன்மையில் வர்த்தகம் : சென்செக்ஸ் காலையில் 435.96 புள்ளிகள் இழப்புடன் 49,066.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 49,304.47 வரை உயர்ந்தது. பின்னர், 48,988.18 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 340.60 புள்ளிகளை (0.69 சதவீதம்) இழந்து 49,161.81-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் நேற்றைய நிலையிலிருந்து 514.23 புள்ளிகளை இழந்திருந்தது தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலும் சந்தையில் நிலையற்ற போக்கு காணப்பட்டது.
 என்டிபிசி, ஓஎன்ஜிசி முன்னேற்றம்:
 சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் என்டிபிசி 4.60 சதவீதம், ஓஎன்ஜிசி 3.69 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. பவர் கிரிட், சன்பார்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, நெஸ்லே இந்தியா, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி கடும் சரிவு:
 அதேசமயம், கோட்டக் பேங்க் 3 சதவீதம், எச்டிஎஃப்சி 2.68 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் சரிவைச் சந்தித்தன.
 மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகி, பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க், முன்னணி பார்மா நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.
 நிஃப்டி 92 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 1,060 பங்குகள் ஆதாயம் பெற்றன. 676 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 91.60 புள்ளிகளை (0.61 சதவீதம்) இழந்து 14,850.75-இல் நிலைபெற்றது. காலையில் வலுவிழந்து 14,789.70-இல் தொடங்கி அதிகபட்சமாக 14,900.00 வரை உயர்ந்தது. பின்னர், பங்குகள் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து 14,771.40 வரை கீழே சென்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் நிஃப்டி நேற்றைய நிலையிலிருந்து 170.95 புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது.
 நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.12 சதவீதம், மீடியா 0.79 சதவீதம், ஆட்டோ 0.22 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 0.29 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன. மற்ற குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இதில் பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், மெட்டல், ஐடி, பார்மா, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.50 முதல் 1.30 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 நிஃப்டி-50 குறியீட்டுப் பட்டியலில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 28 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் கோல் இந்தியா, என்டிபிசி, ஐஓசி, ஓஎன்ஜிசி, பிபிசிஎல் ஆகியவை 2 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்தன. அதே சமயம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி, திவிஸ் லேப் ஆகியவை 1.50 முதல் 3.40 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. 13 பொதுத் துறை வங்கிகளை உள்ளடக்கிய பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் பிஎன்பி மட்டும் 0.84 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மற்ற அனைத்தும் ஆதாயம் பெற்றன. இதில் குறிப்பாக, ஜே அண்ட் கே பேங்க் 6.29 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இந்தியன் பேங்க், யூகோ பேங்க், சென்ட்ரல் பேங்க், யூனியன் பேங்க் ஆகியவை 2 முதல் 5 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
 இன்று எப்படி?
 கடந்த நான்கு நாள்களாக உற்சாகத்தில் இருந்து வந்த "காளை' தற்காலிகமாக சோர்வடைந்துள்ளது. நிஃப்டி 14,950, சென்செக்ஸ் 49,500 என்ற நிலையில் அடி வாங்கியுள்ளது. உலகளாவிய சந்தைகள் சரிவைச் சந்தித்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். தற்போதைய நிலையில், நிஃப்டி 14,750-14,900 என்ற நிலையில் ஒருங்கிணைப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, முக்கிய நிலையாகக் கருதப்படும் 14,900 புள்ளிகளுக்கு மேலே வர்த்தகம் நடந்தால் அடுத்து 15,000 வரை செல்லக்கூடும். அதே சமயம், 14,800 புள்ளிகளை உடைக்கும் பட்சத்தில் "கரடி'யின் பிடி இறுகும்.
 அப்போது, 14,750-14,700 வரை கீழே செல்லக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments