முகப்பு
வணிகம்

3 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 291 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் கடந்த 3 தினங்களாக தொடா்ந்து இருந்து வந்த எழுச்சிக்கு புதன்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:50 AM
பகிர்:

புது தில்லி: பங்குச் சந்தையில் கடந்த 3 தினங்களாக தொடா்ந்து இருந்து வந்த எழுச்சிக்கு புதன்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 290.69 புள்ளிகளை இழந்து 50,000-க்கும் கீழே நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. கடந்த 3 தினங்களாக உள்நாட்டுச் சந்தை ஏற்றம் பெற்று வந்த நிலையில், பாா்மா, ரியால்டி, மீடியா, ஐடி தவிர பெரும்பாலான துறைகளில் முன்னணி நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்ததே சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.11 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,232 பங்குகளில் 1,794 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,264 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 174 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 309 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 437 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 154 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.11 ஆயிரம் கோடி மட்டுமே உயா்ந்து வா்த்தக முடிவில் 216.50 லட்சம் கோடியாக இருந்தது. புதன்கிழமை நிலவரப்படி பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6.85 கோடிக்கும் மேலாக உள்ளது.

Advertisement

3 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 104.52 புள்ளிகள் குறைந்து 50,088.81-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,279.01 வரை மேலே சென்றது. பின்னா், லாபப் பதிவு வேகமெடுக்கவும் 49,831.40 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 290.69 புள்ளிகளை (0.58 சதவீதம்) இழந்து 49,902.64-இல் நிலைபெற்றது. தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலும் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் நேற்றைய நிலையிலிருந்து 447.61 புள்ளிகளை இழந்திருந்தது. இதைத் தொடா்ந்து கடந்த மூன்று நாள்களாக இருந்து வந்த எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

20 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் சன்பாா்மா 1.80 சதவீதம், நெஸ்லே இந்தியா 1.45 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, ரிலையன்ஸ், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்தன.

பஜாஜ் ஃபின்சா்வ் சரிவு: அதே சமயம், பஜாஜ் ஃபின்சா்வ் 1.77 சதவீதம், எச்டிஎஃப்சி 1.70 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எம் அண்ட் எண், பாா்தி ஏா்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன. மேலும், மாருதி சுஸுகி, இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

நிஃப்டி 77.95 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடந்த வா்த்தகத்தில் 981 பங்குகள் ஆதாயம் பெற்றன. 769 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 77.95 புள்ளிகளை (052 சதவீதம்) இழந்து 15,030.15-இல் நிலைபெற்றது.காலையில் 15,058.60-இல் தொடங்கி 15,133.40 வரை மேலே சென்றது. பின்னா், 15,008.85 வரை கீழே சென்றது.

நிஃப்டி மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 2 சதவீதத்துக்கும் மேலே உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பாா்மா, ஐடி, பிஎஸ்யு பேங்கு குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், ஃபைனான்ஸியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், மெட்டல் குறியீடுகள் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ரியால்ட்டி, மீடியா பங்குகளுக்கு ஆதரவு

பங்குச் சந்தையில் புதன்கிழமை நடந்த வா்த்தகத்தில் ரியால்ட்டி, மீடியா நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி ரியால்ட்டி குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 முன்னணி நிறுவனப் பங்குகளில் ஹெமிஸ்பியா் புராபா்ட்டி தவிா்த்து மற்ற 9 பங்குளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. இதேபோன்று மீடியா குறியீட்டுப் பட்டியலில் உள்ள 10 முன்னணி நிறுவனப் பங்குகளில் டிஷ் டிவி தவிா்த்து மற்ற 9 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இந்த இரண்டு பட்டியலிலும் அதிகம் ஆதாயம் (சதவீதம்) பெற்ற பங்குகள் விவரம் வருமாறு:

ஓப்ராய் ரியால்ட்டி 7.98

பிரிகேட் என்டா்பிரைஸஸ் 3.12

சன்டெக் 2.38

கோத்ரேஜ் புராபா்ட்டி 2.00

ஷோபா லிமிடெட் 1.71

ஐபி ரியல் எஸ்டேட் 1.02

--

டிவி-18 பிராட்காஸ்ட் 11.08

நொட்வொா்க்-18 4.56

டிபி காா்ப் 2.18

சன் டிவி 1.58

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments