முகப்பு
இந்தியா

கோழைத்தனமான தலைவர்களுக்கு அதிகாரப் பசி! - யாரைச் சொல்கிறார் பிரியங்கா?

மோடிக்கு அதிகாரப் பசி! அமெரிக்கா இஸ்ரேலுக்கு தலைவணங்குவதில் பிஸி - பிரியங்கா பிரசாரம்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 3:03 PM
பிரியங்கா - @priyankagandhi
பகிர்:

கண்ணூர் : இந்தியாவின் நலன்கள் சார்ந்த விவகாரங்களில் சமரசப்போக்கை பிரதமர் மோடி கடைப்பிடிப்பதாகவும் நீடித்துவரும் மேற்காசிய பதற்றமான சூழல் இந்தியாவில் விளைவித்துள்ள கவலைக்குரிய விவகாரங்களை அவர் எதிர்கொள்ள தவறிவிட்டதாகவும், இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகவும் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலரும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி விமர்சித்தார்.

கேரளத்தில் வரும் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற வாக்காளர்கள் ஆவலுடன் உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சித் தலைவர்களின் இறுதிகட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இங்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்டிஎஃப்) தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யூடிஎஃப்) களம் காண்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Advertisement

கேரளத்தின் கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கி அவர் இன்று (ஏப். 6) ஈடுபட்ட பிரசாரங்களில், “மத்திய கிழக்கில் நிலவும் சிக்கல்கள் போன்ற பிரச்னைகள் இருக்கும்போது, நமது அரசுகள் (மாநில மற்றும் மத்திய) மக்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை. மக்களை மீட்டு அழைத்து வர அரசுகள் எவ்வித பாதுகாப்போ எந்தவொரு திட்டமோ வழங்கவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் திறம்படக் கையாளத் தவறிவிட்டனர்.

நாட்டு மக்கள் மீது பரிவு காட்டாத ஒரு அரசு மத்தியில் அமைந்துள்ளது. மாநிலத்திலும் அதே போன்றதொரு அரசே உள்ளது.

மோடி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தலைவணங்குவதில் பிஸியாக இருக்கிறார். மேற்காசிய போர் தொடங்கப்படுவதற்குச் சரியாக இரு நாள்களுக்கு முன்னர் நமது பிரதமர் இஸ்ரேலுக்கு ஓடிச் சென்று அங்கு பதக்கங்களைப் பெற்று வந்தவர்.

அதிகாரப் பசியுடன் மோடி இருக்கிறார். எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள அவர் தீவிரமாகச் சமரசம் செய்துள்ளார்.அதிகாரத்தைக் கைப்பற்ற, தங்களைப் பாதுகாக்கவும் என்ன வேண்டுமானாலும் செய்யத் துடிக்கும் கோழைகளால் நாம் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பாலஸ்தீன பகுதிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டதைப் பற்றி வாய் திறக்கக்கூட பிரதமருக்கு தைரியமில்லை. நாட்டின் எரிசக்தி துறையை அமெரிக்காவிடம் மத்திய அரசு தாரைவார்த்து விட்டது.

இன்று, நாம் எண்ணெய் வாங்க வேண்டுமா? இல்லையா? என்பதையும் எவரிடமிருந்து நாம் வாங்கலாம்? எப்படி கொள்முதல் செய்யலாம்? என்பதையும் அமெரிக்கா தீர்மானிக்கிறது.

மத்திய அரசு அடியெடுத்து வைத்துள்ள ஒப்பந்தங்களால் இங்குள்ள விவசாயிகள், பெரும் இயந்திரத்தனமான அமெரிக்க பண்ணை விவசாயிகளுடன் போட்டியிடும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் நம் மீது வரி விதிப்பில் ஈடுபட்டதால் நாம் அவர்களுக்காக வரிகளை நீக்கியுள்ளோம்.

அமெரிக்காவிடமிருந்து ரூ. 9 லட்சம் கோடியிலான சரக்குகளை நாம் கொள்முதல் செய்யவிருக்கிறோம். இத்தகைய வெளிநாட்டுக் கொள்கைகள் நாட்டின் பிரச்னைகளை மேலும் பெரிதாக்கவே செய்யும்.

ஓர் இந்தியனாக நான் வருத்தத்தில் உள்ளேன். நாம் கோழைத்தனமான தலைவர்களால் வழிநடத்தப்படுகிறோம். ஜனநாயகத்தில் இப்படி இருக்கக்கூடாது. மக்கள் விழிப்புணர்ச்சியடைந்து கொள்ள வேண்டிய நேரமிது.

கேள்வி கேட்கும் உரிமை நமக்கானது. அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைக்க வேண்டும்” என்றார்.

summary

Congress leader Priyanka Gandhi Vadra on Monday alleged that Prime Minister Narendra Modi has "compromised" India's interests and "failed" to address concerns arising out of the ongoing West Asia crisis, leaving lakhs of Indians without adequate safety measures.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments