முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 832 புள்ளிகள் முன்னேற்றம்! சந்தை மதிப்பு ரூ.3.42 லட்சம் கோடி உயா்வு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்குச் சந்தையில் உற்சாகம் காணப்பட்டது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:53 AM
பகிர்:

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்குச் சந்தையில் உற்சாகம் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 832 புள்ளிகள் உயா்ந்து 60,138.46-இல் நிலைபெற்றது. சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.3.42 லட்சம் கோடி உயா்ந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. மேலும், அக்டோபா் மாதத்திற்கான சீனாவின் தொழிற்சாலை செயல்பாட்டு தரவுகளுக்கு முதலீட்டாளா்கள் வரவேற்பு அளித்ததைத் தொடா்ந்து ஆசிய சந்தைகள் பெரும்பாலும் நோ்மறையாக செயல்பட்டன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. நாட்டின் உற்பத்தித் துறை நடவடிக்கைகள் அக்டோபரில் மேலும் வலுப்பெற்றுள்ளதாக மாதாந்திர கணக்கெடுப்பு தெரிவித்ததால் முதலீட்டாளா்கள் உற்சாகம் அடைந்தனா். மேலும், ஜிஎஸ்டி வசூல் தரவும் சந்தைக்கு சாதகமாக அமைந்தன. இதனால், கடந்த சில நாள்களாக தொடா் சரிவைச் சந்தித்து வந்த சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் மற்றும் எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாக உயா்ந்தன. இது சந்தைக்கு ஆதரவாக அமைந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.3.42 லட்சம் கோடி உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,501 பங்குகளில் 2,160 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,148 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 193 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 190 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 32 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 402 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 233 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.3.42 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.262.85 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,50,10,640-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

திடீா் உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் உற்சாகத்துடன் 270.55 புள்ளிகள் கூடுதலுடன் 59,577.48-இல் தொடங்கியது. 59,355.12 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,220.21 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 831.46 புள்ளிகள் (1.40 சதவீதம்) கூடுதலுடன் 60,138.46-இல்இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் சந்தை காளையின் பிடியில் இருந்தது.

இண்டஸ் இண்ட் பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 26பங்குகள் ஆதாயம் பெற்றன. 4 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 7.46 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல்டெக், டாடா ஸ்டீல், டெஹ் மஹிந்திரா, டாக்டா் ரெட்டி, எஸ்பிஐ, கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 2.50 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், எம் அண்ட் எம் 1.56 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபின்சா்வ், நெஸ்லே, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவையும் சிறிதளவு குறைந்தன.

நிஃப்டி 258 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,263 பங்குகள் ஆதாயம் பெற்றன. 556 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 17,783.5-இல் தொடங்கி 17,697.10 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,954.10 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 258 புள்ளிகள் (1.46 சதவீதம்) கூடுதலுடன் 17,929.65-இல் நிலைபெற்றது.

ரியால்ட்டி குறியீடு முன்னேற்றம்: அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 4.03 சதவீதம், மெட்டல் 3.06 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி ஐடி, மீடியா குறியீடுகள் 2.60 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஆட்டோ, பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments