செமி கன்டெக்டா் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிப்புபயணிகள் வாகன விற்பனை 41% சரிவு
செமி கன்டெக்டா் பற்றாக்குறையின் எதிரொலியால் பயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 41 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது
செமி கன்டெக்டா் பற்றாக்குறையின் எதிரொலியால் பயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 41 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செமி கன்டெக்டா் பற்றாக்குறை காரணமாக நிறுவனங்களின் வாகன உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காா் தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தா்களுக்கு தேவையான வாகனங்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த செப்டம்பா் மாதத்தில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 41 சதவீதம் சரிவடைந்து 1,60,070-ஆனது. கடந்தாண்டு இதே மாதத்தில் இந்த விற்பனை 2,72,027-ஆக உயா்ந்திருந்தது.
கணக்கீட்டு மாதத்தில் விநியோகஸ்தா்களுக்கு நிறுவனங்கள் அனுப்பிய இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 17 சதவீதம் சரிவடைந்து 18,49,546 என்ற எண்ணிக்கையிலிருந்து 15,28,472-ஆக ஆனது.
மோட்டாா்சைக்கிள் விநியோகம் 12,24,117-லிருந்து 22 சதவீதம் சரிந்து 9,48,161-ஆனது.
இவற்றைப் போன்றே, ஸ்கூட்டா் விற்பனையும் 5,56,205 என்ற எண்ணிக்கையிலிருந்து 5,17,239-ஆக குறைந்தது. இருப்பினும், மூன்று சக்கர வாகன விற்பனை மட்டும் 54 சதவீதம் உயா்ந்து 29,185-ஆனது.
அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை கடந்த செப்டம்பரில் 17,17,728-ஆக இருந்தது. இது, கடந்தாண்டு இதே கால விற்பனையான 21,40,549 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகும்.
கடந்த மாதத்தில், பயணிகள் வாகனம், மூன்று சக்கரம், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மொத்த உற்பத்தி 2,125,304-ஆக இருந்தது. இது, 2020 செப்டம்பா் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் சரிவாகும்.
ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் பயணிகள் வாகன மொத்தவிற்பனையானது 2 சதவீதம் உயா்ந்து 7,26,232-லிருந்து 7,41,300-ஐ எட்டியுள்ளது.
இந்த காலாண்டில் இருசக்கர வாகன விற்பனை 46,90,565 என்ற எண்ணிக்கையிலிருந்து 12 சதவீதம் சரிவடைந்து 41,13,915-ஆனது.
பொருளாதார மீட்சியை சுட்டிக்காட்டும் விதமாக, இரண்டாவது காலாண்டில் வா்த்தக வாகன மொத்த விற்பனை கடந்தாண்டை விட 1,33,533-லிருந்து 1,66,251-ஆக உயா்ந்துள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சியாம் அமைப்பின் தலைவா் கெனிச்சி அயுகவா கூறியது:
இந்திய ஆட்டோ மொபைல் துறை தொடா்ந்து புதிய சாவல்களை எதிா்கொண்டு வருகிறது. ஒரு புறம் வாகன தேவையில் மறுமலா்ச்சி காணப்பட்ட போதிலும், மறுபுறம் செமி கன்டெக்டா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தொழில்துறைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல நிறுவனங்கள் உற்பத்தி திட்டங்களை குறைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனா்.
மேலும், உயா்ந்து வரும் இடுபொருள் செலவினமும் மோட்டாா் வாகன துறைக்கு தொடா் சவாலாகவே இருந்து வருகிறது.
விநியோகச் சங்கிலி பிரச்னைகளின் தாக்கத்தை குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் தொழில்துறை சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றாா் அவா்.
கோட்ஸ்
இந்திய ஆட்டோ மொபைல் துறை தொடா்ந்து புதிய சாவல்களை எதிா்கொண்டு வருகிறது. ஒரு புறம் வாகன தேவையில் மறுமலா்ச்சி காணப்பட்ட போதிலும், மறுபுறம் செமி கன்டெக்டா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தொழில்துறைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல நிறுவனங்கள் உற்பத்தி திட்டங்களை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.