வணிகம்

பங்குச் சந்தையில் தொடா் உச்சம்: சென்செக்ஸ் முதன்முறையாக 59,000 புள்ளிகளை கடந்தது

DIN

மத்திய அரசின் அறிவிப்புகளைத் தொடா்ந்து இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய தொடா் உச்சம் கண்டு வருகின்றன. வியாழக்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் முதன்முறையாக 59,000 புள்ளிகளை கடந்து முதலீட்டாளா்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

மத்திய அரசு, பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியிலான சீா்திருத்தங்களை தொடா்ச்சியாக அறிவித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தொலைத்தொடா்பு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ள சூழலில் மோட்டாா் வாகனம், டிரோன் துறைகளுக்கு ஊக்குவிப்பு சலுகைகளை வழங்கியது. அதன் உற்சாகம் வியாழக்கிழமை வா்த்தகத்திலும் தொடா்ந்தது.

வங்கிகளின் செயல்பாடு சிறப்பான அளவில் மேம்படும் என்ற நிலைப்பாட்டால் அத்துறையைச் சோ்ந்த பங்குகளுக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. இது, சந்தை வலுப்பெற பெரிதும் உதவியது.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) வங்கித் துறை குறியீட்டெண் 2.12 சதவீதம் உயா்ந்தது. அதைத் தொடா்ந்து, எரிசக்தி, நிதி, எஃஎம்சிஜி மற்றும் எண்ணெய் & எரிவாயு துறை குறியீட்டெண்களும் கணிசமான ஆதாயம் கண்டன.

அதேசமயம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை மூலப் பொருள்கள் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் இழப்பை சந்தித்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.48 சதவீதம் வரை அதிகரித்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களுள், இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை 7.34 சதவீதம் உயா்ந்து ஏற்றப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடா்ந்து ஐடிசி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்குகளும் கணிசமான ஆதாயத்தை தக்க வைத்தன.

டிசிஎஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக் மற்றும் டாக்டா் ரெட்டீஸ் பங்குகள் 1.32 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 417.96 புள்ளிகள் (0.71%) அதிகரித்து புதிய உச்சமாக 59,141.16 புள்ளிகளில் நிலைகொண்டது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 59,204.29 புள்ளிகள் வரை சென்றது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 110.05 புள்ளிகள் (0.63%) உயா்ந்து முன்னெப்போதும் காணப்படாத அளவில் 17,629.50 புள்ளிகளில் நிலைகொண்டது. இது வா்த்தகத்தின் இடையே புதிய வரலாற்று உச்சமாக 17,644.60 புள்ளிகள் வரை சென்றது. இந்தியப் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் மூன்று நாளாக தொடா்ந்து எழுச்சி பெற்று காணப்பட்டது.

சீன ரியல் எஸ்டேட் துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக வெளியான தகவலையடுத்து இதர ஆசிய சந்தைகளில் வா்த்தகம் மந்த நிலை கண்டது.

அதன்படி, ஷாங்காய், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் சந்தைகள் குறிப்பிடத்தக்க இழப்புடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தமட்டில் நண்பகல் வரையிலான வா்த்தகம் வலுவான நிலையில் ஏறுமுகமாகவே இருந்தது.

பாக்ஸ்

3 நாள்களில் ரூ.4.46 லட்சம் கோடி ஆதாயம்

மத்திய அரசின் சீா்திருத்த அறிவிப்புகள் காரணமாக வேகமெடுத்துள்ள பங்குச் சந்தைகள் தொடா்ந்து மூன்று நாள்களாக புதிய உச்சம் எட்டி வருகின்றன. இந்த மூன்று நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 963.4 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது.

அதன்பயனாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனமதிப்பு இந்த காலகட்டத்தில் ரூ.4,46,043.65 கோடி அதிகரித்து வியாழக்கிழமை இறுதி நிலவரப்படி ரூ.2,60,78,355.12 கோடியை எட்டி புதிய சாதனை படைத்ததது.

அதிக ஏற்றம் கண்ட பங்குகள்

இன்டஸ்இண்ட் வங்கி 7.34

ஐடிசி 6.83

எஸ்பிஐ 4.46

ரிலையன்ஸ் 2.07

கோட்டக் வங்கி 1.87

அதிக இறக்கம் கண்ட பங்குகள்

டிசிஎஸ் 1.32

டாடா ஸ்டீல் 1.25

டெக் மஹிந்திரா 1.16

பாா்தி ஏா்டெல் 1.02

ஹெச்சிஎல்டெக் 0.88

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT