2 நாள் சரிவுக்குப் பிறகு ஏற்றம்: சென்செக்ஸ் 777 புள்ளிகள் அதிகரிப்பு
இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை நேர்மறையாக முடிவடைந்தது.
இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்தது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.4.11 லட்சம் கோடி அதிகரித்தது.
உலக அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் ஏறுமுகத்தில் இருந்தன. குறிப்பாக, ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்தது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும்
எதிரொலித்தது. இதனால், ஆரம்பமே சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. மேலும், திங்கள்கிழமை கடும் சரிவைச் சந்தித்த மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் பங்குகள் வெகுவாக உயர்ந்ததும் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை வர்த்தகத்தில் ரூ.3,302.85 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
1,907 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,502 நிறுவனப் பங்குகளில் 1,502 பங்குகள் விலை குறைந்தன. 1,907 பங்குகள் ஆதாயம் பெற்றன. 93 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 154 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.36 கோடியை தாண்டியது.
777 புள்ளிகள் ஏற்றம்: காலையில் 486.35 புள்ளிகள் கூடுதலுடன் 57,066.24-இல் தொடங்கிய சென்செக்ஸ், 56,904.51 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 57,442.24 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 776.72 புள்ளிகள் கூடுதலுடன் 57,356.61-இல் நிலைபெற்றது.
முன்பேர வர்த்தகத்தில் ஏப்ரல் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
எம் அண்ட் எம் அபாரம்: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், ஆக்ஸிஸ் பேங்க், ஏஷியன் பெயிண்ட், மாருதி சுஸýகி, டிசிஎஸ் ஆகிய 4 நிறுவனப் பங்குகள் மட்டுமே சிறிதளவு வீழ்ச்சி கண்டிருந்தன. மற்ற 26 நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில், வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 4.11 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பவர் கிரிட், டைட்டன், இன்டஸ்இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எல் அண்ட் டி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ், பஜாஜ்ஃபின் சர்வ் உள்ளிட்ட முக்கிய நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 247 புள்ளிகள் உயர்வு:
தேசிய பங்குச் சந்தையில் 767 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 1,167 பங்குகள் ஆதாயம் பெற்றன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 42 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் இருந்தன. நிஃப்டி குறியீடு 246.85 புள்ளிகள் (1.46 சதவீதம்) உயர்ந்து 17,200.80-இல் நிறைவடைந்தது. காலையில் 167.35 புள்ளிகள் கூடுதலுடன் 17,121.30-இல் தொடங்கிய நிஃப்டி, 17,064.45 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,223.85 வரை உயர்ந்தது.
அனைத்துக் குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில், நிஃப்டி ரியால்ட்டி 3.57 சதவீதம், ஆட்டோ 2.80 சதவீதம், பிஎஸ்யு பேங்க் 2.35 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஆயில் அண்ட் காஸ், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், பார்மா, மெட்டல், மீடியா, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.