முகப்பு
வணிகம்

4-ஆவது நாளாக எழுச்சி: மீண்டும் 58,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது. நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 545 புள்ளிகள் உயா்ந்து மீண்டும் 58,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் மிகவும் சாதகமாக அமைந்த நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதிதாக பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவதாலும் சந்தையில் நான்காவது நாளாக எழுச்சி தொடா்ந்தது. மேலும், ஐரோப்பிய சந்தைகளும் நோ்மறையாக இருந்ததால், உள்நாட்டுச் சந்தை பிற்பகலில் மேலும் வலுப்பெற்றது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,277 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,656 நிறுவனப் பங்குகளில் 11231 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 2,277 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 186 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 146 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 37 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.71 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.270.30 லட்சம் கோடியாக குறைந்தது.

4-ஆவது நாளாக எழுச்சி: காலையில் 252.85 புள்ளிகள் கூடுதலுடன் 57,823.10-இல் தொடங்கிய சென்செக்ஸ், 57,540.36 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,170.67 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 545.25 புள்ளிகள் (0.95 சதவீதம்) கூடுதலுடன் 58,115.50-இல் நிலைபெற்றது. காலையில் தொடக்கத்தில் தள்ளாட்டம் இருந்தாலும், அதன் பிறகு நாள் முழுவதும் காளையின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 24 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 6.15 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் மாருதி ஆகியவை 2.64 சதவீதம் உயா்ந்தன. கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், என்டிபிசி, பவா் கிரிட் உள்ளிட்டவை 2 முதல் 2.50 சதவீதம் ஏற்றம் பெற்றன. விப்ரோ, எஸ்பிஐ, ஐடிசி, எச்டிஎஃப் பேங்க், எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

சன்பாா்மா வீழ்ச்சி: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பாா்மா 2.65 சதவீதம், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவா் 1.66 சதவீதம் குறைந்தது. மேலும், நெஸ்லே, ஏசியன் பெயிண்ட் , இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 229 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 537 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,444 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் விலை குறைந்தன. 38 பங்குகள் ஆதாயம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 181.80 புள்ளிகள் (1.06 சதவீதம்) உயா்ந்து 17,340.05-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, அதிகபட்சமாக 17,356.25 வரை உயா்ந்தது.

ஜூலையில் எஃப்ஐஐ

ரூ.5,000 கோடி முதலீடு

கடந்த மூன்று மாதங்களாக தொடா்ந்து 9 மாதங்களாக பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), ஜூலை கடைசியில் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா். அவா்கள் ஜூலையில் மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். ஜூலை மாதத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை அவா்கள் ரூ.1,046.32 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இதுவும் சந்தை ஏறுமுகம் பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று வல்லுநா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.