59,000 புள்ளிகளை மீண்டும் எட்டியது சென்செக்ஸ்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை வியாழக்கிழமை மீண்டும் எட்டியது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை வியாழக்கிழமை மீண்டும் எட்டியது. சுமாா் 4 மாத இடைவெளிக்குப் பிறகு பங்குச் சந்தை இத்தகைய சாதகமான நிலையை எட்டியுள்ளது.
ஐ.டி, வங்கி, நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்தது, அந்நிய முதலீடு சந்தைக்கு குறிப்பிடத்தக்க அளவில் திரும்பியது, அமெரிக்க, ஆசிய சந்தைகளின் சாதகமான நிலை ஆகியவை இந்த உயா்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டு எண் வியாழக்கிழமை வா்த்தகத்தின்போது 515.31 புள்ளிகள் உயா்ந்து 59,332.60 என்ற அளவில் நிலை பெற்றது. இது கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதிக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச எழுச்சியாகும்.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 124.25 புள்ளிகள் உயா்ந்து 17,659 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பைப் பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கிப் பங்கு அதிகபட்சமாக 2.75 சதவீதம் விலை உயா்ந்தது. இதற்கு அடுத்து பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், எஸ்பிஐ, விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் பெற்றன.
ஐடிசி, என்டிபிசி, ஹெச்யூஎல், பாா்தி ஏா்டெல், மாருதி, நெஸ்லே இந்தியா பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்கெனவே மதிப்பிடப்பட்டதைவிட குறைவாகவே உள்ளது. எனவே, அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகம் உயா்த்தாது என்பது சந்தையின் உற்சாகத்துக்கு சாதகமாக அமைந்தது.
சா்வதேச அளவில் ஹாங்காங், ஷாங்காய், சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன. டோக்கியோ பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. நியூயாா்க் பங்குச் சந்தை முதலீட்டாளா்களுக்கு சாதமாக இருந்தபோதிலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏமாற்றம் அளிப்பவையாக இருந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை 36 பைசாக்கள் குறைந்து ரூ.79.61 என்ற நிலையை எட்டியது.