இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் "காளை'யின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 361 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி மேலும் 117.70 புள்ளிகள் (0.65 சதவீதம்) உயர்ந்து 18,132.30-இல் நிலைபெற்றது.
கரோனா அச்சத்துக்கிடையிலும் ஆசிய, ஐரோப்பிய சந்தைகள் ஏற்றம் பெற்றிருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், தொடர்ந்து 2-ஆவது நாளாக நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.2.43 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.280.43 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) திங்கள்கிழமை ரூ. 497.65 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்வு: காலையில் 294.99 புள்ளிகள் கூடுதலுடன் 60,861.41-இல் தொடங்கிய சென்செக்ஸ், லாபப் பதிவு காரணமாக 60,405.66 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 60,986.68 வரை எழுச்சி பெற்ற சென்செக்ஸ், இறுதியில் 361.01 புள்ளிகள் (0.60 சதவீதம்) உயர்ந்து 60,927.43-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி கண்டன. 25 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
டாடா ஸ்டீல் அபாரம்: பிரபல உருக்கு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 5.86 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 2.42 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், டைட்டன், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, ரிலையன்ஸ், மாருதி, இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்ந்தன.
ஹெச்யுஎல் சரிவு: அதே சமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்) 1 சதவீதம் குறைந்து குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நெஸ்லே, ஐடிசி, எம் அண்ட் எம், என்டிபிசி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.